சென்னை வானொலி-80

இந்திய மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்த ஊடகம் வானொலி. காலை 5.55 மணிக்கு விக்டர் பரஞ்சோதி இசையமைத்த அகில இந்திய வானொலியின் பிரத்யேக இசையுடனும், பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த வந்தே மாதரம் பாடலுடனும் தொடங்கும் நிகழ்ச்சிகள், இரவு 12 மணி வரை நீளும். வானொலி சேவைகள் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தாலும், சென்னை வானொலி நிலையத்துக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு. கடந்த 1938}ஆம் ஆண்டு ஜூன் 16}ஆம் தேதி தொடங்கிய அதன் பயணம், தற்போது 80 ஆண்டுகளைக் கடந்து, 81}ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி, சென்னை வானொலி நிலைய இயக்குநர் வி.சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினோம்:

இந்த 80 ஆண்டுகளில் சென்னை நிலையத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்னவென்று குறிப்பிடுவீர்கள்?
ஆங்கிலேய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் நாட்டில் படிப்பறிவு கொண்ட மக்கள் குறைவாக இருந்தது தெரிந்ததுதான். அப்போது, நாடு முழுவதும் 6 வானொலி நிலையங்கள் தான் இருந்தன. அவற்றில் தென் மாநிலங்களில் இருந்த நிலையங்கள் சென்னையும், திருச்சியும் தான். அவற்றில் முதலில் தொடங்கப்பட்டது சென்னை நிலையம். அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் பயன்பட்டது வானொலி மட்டும்தான்.
தொழில்நுட்ப மாற்றங்களைப் பொருத்தவரை, முதலில் வானொலி மூலம் நேரடி ஒலிபரப்புகள் மட்டும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைக்கு வானொலி தொழில்நுட்பக் கருவிகள் விலை உயர்ந்ததாக இருந்ததுதான் காரணம். பேச்சில் காணப்படும் தடுமாற்றம் போன்ற தவறுகள் நேரடி ஒலிபரப்பில் எதிரொலிக்கும் நிலை இருந்தது. பிறகு 1950}களில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஒலிபரப்பும் முறை ஏற்பட்டது. தற்போது டிஜிட்டல் வசதிகளுடன் அதிநவீன வசதிகளுடன் துல்லியமாக ஒலிபரப்பப் படுகின்றன.

அகில இந்திய வானொலி என்றாலே பிரபலங்கள் தான். இங்கே வருகை புரிந்த, பணியாற்றியவர்களைப் பற்றி சொல்ல முடியுமா?
1938-இல் சென்னை நிலையத்தை முதலில் ஒலிப்பதிவு செய்து தொடக்கி வைத்தவரே அன்றைய சென்னை மாகாண பிரதம மந்திரி ராஜாஜி தான். எத்தனையோ பிரபலங்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இசை அறிஞர்களில் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா, செம்மங்குடி சீனிவாச அய்யர், டி.கே.பட்டம்மாள் போன்றவர்கள் வானொலியில் கச்சேரிகள் நடத்தி, வானொலியோடு தாங்களும் வளர்ந்தனர். உரைநடைத் துறையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, கி.வா.ஜகந்நாதன், அறிஞர் அண்ணா, புலவர் கீரன், மு.வரதராசனார் என்று பலர் வந்து பேசியிருக்கிறார்கள். அதேபோல, தமிழில் முதன் முதலில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் தான். அதில் எங்களுக்கு தனிப் பெருமையே உண்டு.

பேரிடர் காலங்களில் வானொலி நிலையத்தின் செயல்பாடு எப்படி?
பேரிடர் மேலாண்மையைப் பொருத்தவரை, வானொலி நிலையம் துரிதமாகவும், சிறப்பாகவும் இயங்கி வருகிறது. சுனாமியின்போது மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பது பற்றிய தகவல்களை அளித்தோம். 2015 டிசம்பர் 1}ஆம் தேதி பெய்த பேய் மழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கிவிட்டன. பல இடங்களில் இருக்கும் குடியிருப்புகளில் மூன்றாவது மாடி வரை மழையில் மூழ்கிய நிலைமை. அந்த நேரத்தில் நான் சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகள் பிரிவுத் தலைவராக இருந்தேன். உதவி வேண்டுவோரும், உதவும் உள்ளங்களும் பங்கேற்கும் தொலைபேசி வழி நிகழ்ச்சியை நடத்தினோம். எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அது பற்றிய தகவல்களை எங்கள் வாசகர்களுக்கு அளித்து உதவிகள் கோரினோம். சுமார் 15 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின் படி, வானொலி சேவை மூலமாக சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு உதவிகளும் உணவுப் பொட்டலங்களும் கிடைத்ததாகத் தெரியவந்தது. இதுபோன்ற நேரங்களில் வானொலியால் மட்டுமே இயங்க முடியும். உதாரணமாக, சென்னையில் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாத நேரத்திலும் வானொலியின் சேவை அனைத்து மக்களையும் சென்றடைந்தது.

சென்னை நிலையத்தில் இருந்து என்னென்ன சேவைகள் அளிக்கப்படுகின்றன?
1938}இல் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் சென்னை}1, சென்னை}2 என இரண்டு அலைவரிசைகள் ஒலிபரப்பாகின. சென்னை}1 அலைவரிசையில் செய்திகள், நிகழ்ச்சிகள், உரைநடைகள், இசைக் கச்சேரிகள் என்று தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறோம். சென்னை}2 அலைவரிசையில் இந்நகரத்தில் பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இதில் 40 சதவீத நிகழ்ச்சிகள் இளைஞர்களை மையமாக வைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலிபரப்பப்படுவதுதான்.
இந்தியாவில் முதல் பண்பலை சேவை (எஃப்.எம்) தொடங்கியது சென்னையில் தான். இந்தியாவில் வானொலி சேவை 18.8.1927 அன்று தொடங்கியது. அதன் 50}ஆவது ஆண்டை முன்னிட்டு, 1977}இல் முதல் பண்பலை ஒலிபரப்பு சென்னையில் தொடங்கியது. முதலில் அதன் பெயர் சென்னை எஃப்.எம். பிறகு, 1997}இல் ரெயின்போ எஃப்.எம். என்று பெயர் மாறியது. 1997}இல் நாட்டின் சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு எஃப்.எம். கோல்டு என்ற சேவையும் தொடங்கியது.

பிற மொழி சேவைகள், அயலகச் சேவைகள் சென்னையிலிருந்து இயங்குகிறதா?
பிற மொழி சேவைகள் சென்னையில் இல்லை. அந்தந்த மாநிலத்தில் இருந்தே மாநில மொழி சேவைகள் இயங்குகின்றன. அயலகச் சேவையைப் பொருத்தவரை, அகில இந்திய வானொலி 26 மொழிகளில் ஒலிபரப்புகிறது. தேவைப்பட்டால், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இங்கே ஒலிபரப்புகிறோம். சென்னையிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கான சேவையை தினமும் மாலை 4.45 முதல் 5.45 வரை ஒலிபரப்பி வருகிறோம். அதில் இந்தியா சார்ந்த செய்திகள், உரைநடை சித்திரங்கள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை போன்றவற்றை அளித்து வருகிறோம்.

இன்றைக்கும் வானொலி செய்திகளுக்கு மதிப்பு இருக்கிறதா?
நிச்சயமாக. எஃப்.எம். ரெயின்போவில் காலை 6 முதல் இரவு 11 வரை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் செய்திச்சுருக்கம் ஒலிபரப்பி வருகிறோம். இது தவிர, காலை 6.45, மாலை 6.45 ஆகிய நேரங்களில் மாநில செய்திகளும், முன்னர் தில்லியில் இருந்து ஒலிபரப்பாகி வந்த ஆகாசவாணி செய்திகளை தற்போது இங்கிருந்தே காலை 7.15, மதியம் 12.40, இரவு 7.15 ஆகிய நேரங்களில் ஒலிபரப்பி வருகிறோம். தவிர, திருச்சி நிலையத்தில் இருந்து மதியம் 1.45}க்கு ஒலிபரப்பாகும் செய்திகளுக்குப் பரவலாக நேயர்கள் இருக்கிறார்கள். நடுநிலை, நேர்மை, அரசியல் சார்பின்மை, உண்மை போன்ற அம்சங்களுக்காக வானொலி செய்திக்கு இன்றும் மதிப்பு உண்டு.

இன்று தனியார் பண்பலை சேவைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதே?
ஆமாம். சென்னையில் மட்டும் 11, 12 பண்பலை சேவைகள் இயங்குகின்றன. ஆனால், செய்திகளை சென்னை வானொலி மட்டும்தான் ஒலிபரப்ப முடியும். அது தவிர, நிகழ்ச்சிகளில் நாங்கள் தொடர்ந்து தரத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். எங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. மொழிநடையில், திரையிசைப் பாடல்களை ஒலிபரப்புவதில் இன்னும் தனித்தன்மை இருக்கவே செய்கிறது.

திரையிசை பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில், நிகழ்ச்சிகளில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்?
திரையிசைப் பாடல்களைத் தேர்வு செய்வதற்காக, ஒரு தேர்வுக்குழு சென்னையில் இயங்குகிறது. அருவருப்பான, ஆபாசமான வார்த்தைகள் அற்ற, அரசியல் சார்பற்ற, வன்முறையைத் தூண்டாத பாடல்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம். அந்தப் பாடல்களின் பட்டியலை தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மற்ற நிலையங்களுக்கும் அனுப்புகிறோம். தவிர, படம் வெளியாவதற்கு முன்பு இங்கே பாடல்களை ஒலிபரப்புவதில்லை. அப்படியே வெளியிட நேர்ந்தாலும், அதை வர்த்தக ரீதியாக மட்டுமே ஒலிபரப்புவோம்.
(தினமணி கொண்டாட்டம் 24-06-2018 இதழில் வெளியானதன் முழு வடிவம்)

Advertisements
Posted in Uncategorized | Leave a comment

எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே!

​ண்​மை​யில் நடை​பெற்ற திரி​புரா மாநில தேர்​த​லில் 25 ஆண்​டு​கள் ஆட்சி​யில் இருந்த கம்​யூ​னிஸ்ட் கட்சி தோற்​க​டிக்​கப்​பட்டு, பாஜக கூட்டணி வெற்​றி​பெற்​றது. தேர்​தல் முடி​வு​கள் வெளி​யா​ன​துமே, மாநி​லத்​தில் இருந்த லெனின் சிலை உடைக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்து, தமி​ழக பாஜக மூத்த தலை​வர் ஹெச்.​ரா​ஜா​வின் முக​நூல் பக்​கத்​தில், ‘அடுத்து தமி​ழ​கத்​தில் ஈ.வெ.ரா. சிலைக்கு’ என்று பதி​வி​டப்​பட்​டி​ருந்​தது. அதற்கு பலத்த எதிர்ப்​பு​கள் கிளம்​பவே முக​நூல் பதிவு நீக்​கப்​பட்​ட​தோடு, வருத்​த​மும் தெரி​வித்​தார். மேற்கு வங்​கத்​தில் பாஜ​க​வின் முன்​தோன்​ற​லான பார​திய ஜன​சங்​கத்​தின் தலை​வர் சியாம்​பி​ர​சாத் முகர்​ஜி​யின் சிலை சேதப்​ப​டுத்​தப்​பட்​டது. பிர​த​மர் தலை​யிட்டு சூட்டைத் தணிக்க முற்​பட்​டார். ஆனால், கார​சார விவா​தம் தொடர்ந்​தது.

அர​சி​யல்​ரீ​தி​யாக ஒரு சித்​தாந்​தமோ அல்​லது கட்சியோ தோற்​க​டிக்​கப்​ப​டும்​போது, அதன் அடை​யா​ளங்​க​ளை​யும், சிலை​க​ளை​யும் உடைப்​பது கடந்த இரு​ப​தாம் நூற்​றாண்​டில் சர்​வ​தேச அள​வில் தொடங்​கி​விட்​டது. ரஷி​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி அகற்​றப்​பட்​ட​போது, அவ​ரது வீட்டு நாய்க்​குட்டி கூட கொல்​லப்​பட்டு தட​யங்​கள் அழிக்​கப்​பட்​ட​தா​கச் சொல்​லப்​ப​டு​வ​துண்டு. அதன் தொடர்ச்​சி​யாக, 1980-களில் கம்​யூ​னி​ஸம் வீழ்ந்​த​போது, சோவி​யத் யூனி​யன் நாடு​க​ளில் இருந்த பிரம்​மாண்ட லெனின், ஸ்டா​லின் சிலை​கள் அடித்து நொறுக்​கப்​பட்​டன.
இராக்​கில் சதாம் உசேன் ஆட்சி முடிவு வந்​த​தும், அவ​ரது சிலை ஆக்​ரோ​ஷ​மாக அகற்​றப்​பட்​டது. இந்​தி​யா​வும் அதற்கு விதி​வி​லக்​கல்ல. உத்​த​ரப் பிர​தே​சத்​தில் மாயா​வதி அவ​ரது கட்சி தேர்​தல் சின்​ன​மான யானை​யைப் பெரிய சிலை​க​ளாக வடித்​தி​ருந்​தார். பேர​வைத் தேர்​த​லில் அவர் தோல்​வி​யுற்​ற​தும் அந்த யானை​கள் காணா​மல் போயின. ஆஃப்​க​னிஸ்​தா​னில் பிரம்​மாண்ட புத்​தர் சிலை​கள் உடைக்​கப்​பட்​டது மத ரீதி​யா​னது என்​றா​லும், ஆட்சி மாற்​றத்​தின் விளைவே.

இந்​தியா மீது படை​யெ​டுத்த முக​லா​யர்​கள், கோயில்​க​ளை​யும் குறி​வைத்​த​னர்.
நம் நாட்டி​லேயே அர​சர்​கள் படை​யெ​டுத்​துப் போரிட்​ட​போது கோயில்​களை அழிக்​கும் வழக்​கம் தொடக்​கத்​தில் இருந்​த​தாக சில வர​லாற்​றா​சி​ரி​யர்​கள் கூறு​கி​றார்​கள். ஆனால், பிற்​கா​லத்​தில் அது வழக்​கொ​ழிந்து, சிவ​னும், விஷ்​ணு​வும் அரு​க​ருகே கோயில் கொண்ட அதி​ச​யம் நிகழ்ந்​த​தும் இங்​கே​தான். அது மட்டு​மல்ல. பிற நாட்ட​வர் வழி​ப​டும் கட​வு​ள​ரை​யும் ஏற்​றுக்​கொள்​ளும் பண்பு இங்​கி​ருந்​தது. வெளி​நாட்​டி​லி​ருந்து வந்த பார்சி மதத்​தி​னர் இங்​குள்ள மக்​க​ளோடு இசைந்து வாழ்​கின்​ற​னர். உல​கெங்​கும் சித​றிய யூதர்​கள் பிற நாடு​க​ளில் கொடு​மைப்​ப​டுத்​தப்​பட்​டா​லும், இந்​தி​யா​வில் மரி​யா​தை​யு​டன் நடத்​தப்​பட்​டதை நவீன யூதர் வர​லாறு கூறு​கி​றது.
இந்த மண்​ணி​லேயே தோன்​றிய பெளத்த, சமண மதங்​கள் சூன்​ய​வா​தத்​தைக் கொள்​கை​யாக முன்​வைத்து பிரம்​மாண்​ட​மாக வளர்ந்​தன. வைதிக மதத்தை அசைத்​துப் பார்த்​தன. இன்று பெளத்​தம் ஒரு​சில ஆசிய நாடு​க​ளில் பெரிய மத​மா​கத் திகழ்ந்​தா​லும், இந்​தி​யா​வில் புத்​தரை மஹா​விஷ்​ணு​வின் அவ​தா​ரங்​க​ளில் ஒன்​றா​கக் கரு​து​வோ​ரும் உண்டு.

நாத்​தி​க​வா​தத்​தை​யும் ஆன்​மி​கத்​தோடு கலந்து பார்த்​தது இங்​கு​தான். சார்​வா​க​மும் சாங்​கிய தத்​து​வ​மும் இந்து தத்​துவ இய​லின் கிளை​யா​கி​விட்​டன. நாத்​தி​கத்தை வெளிப்​ப​டுத்​தும் ஏரா​ள​மான ஆன்​மிக இலக்​கி​யங்​கள் இருக்​கின்​றன. திரு​ஞா​ன​சம்​பந்​தர் காலத்​தில் ‘நட்ட கல்​லும் பேசு​மோ?’ என்று கேலி பேசி​ய​போது, அதை எதிர்​கொண்​ட​தாக வர​லாறு உண்டு. வால்​மீகி ராமா​ய​ணத்​தில் ஜாபாலி என்ற முனி​வ​ருக்​கும், ராம​ருக்​கும் நடை​பெ​றும் விவா​தத்​தில் நாத்​தி​க​வா​தம், மூட நம்​பிக்கை ஒழிப்பு போன்ற கருத்​து​கள் கூறப்​பட்​டன. ஆத்​தி​க​வா​தம் பேசப்​பட்ட காலம் முழு​வ​தும், நாத்​தி​க​வா​த​மும் பேசப்​பட்​டது. அதை​யும் வர​வேற்ற பரந்த பண்​பாட்​டிற்​குச் சொந்​த​மா​ன​வர்​கள் நாம்.
ஆனால், முந்​தைய எழுச்​சி​க​ளால் விளைந்த சல​ச​லப்​பு​கள் அள​வுக்கு கடந்த நூற்​றாண்​டின் தமி​ழக நாத்​தி​க​வா​தம் பேசப்​ப​ட​வில்லை. பெரிய, பெரிய சுனா​மி​க​ளையே சமா​ளித்த நம்​ம​வர்​க​ளுக்கு, தோர​ணப் பிர​சா​ரங்​கள் எம்​மாத்​தி​ரம்? நாத்​தி​கத் தலை​வ​ரைப் புகழ்ந்​து​கொண்டே அவ​ரது தொண்​டர்​கள் கோயில்​க​ளுக்கு சாரி, சாரி​யா​கச் சென்​ற​னர். திரு​வண்​ணா​மலை கிரி​வ​ல​மும், சப​ரி​மலை யாத்​தி​ரை​யும், பழனி பாத யாத்​தி​ரை​யும் பிர​ப​ல​மா​னது, மிக சமீ​பத்​திய ஆண்​டு​க​ளில்​தான். வீதி​க​ளில் கட​வுள் சிலை​களை உடைத்து ‘சிலை​க​ளுக்கு உயிர் இல்லை’ என்​ற​வ​ருக்​கும் பெரிய பெரிய சிலை​கள் எழுப்​பப்​பட்​டன. அந்​தச் சிலை​க​ளும் மகத்​து​வம் பெற்று, சிலர் வழி​ப​ட​வும் செய்​தார்​கள். தொண்​டர்​கள் பக்​தர்​க​ளா​னார்​கள்.

இந்து வழி​பாட்டு இய​லில் சிலை வழி​பாடு கீழ்​நி​லை​தான். உரு​வ​மற்ற கட​வுளை வணங்​கு​வ​தும், ‘தத்-த்​வ​மஸி’ என தன்​னையே கட​வு​ளாக உயர்த்​து​வ​துமே உயர்​நி​லை​யா​கக் கரு​தப்​பட்​டது. அப்​படி உணர்ந்​த​வர்​க​ளையே சமூ​கத்​தில் உயர்​நி​லை​யி​லும் வைத்​தார்​கள். இப்​ப​டித்​தான் வழி​பட வேண்​டும் என்ற பிடி​வா​த​மும் இங்​கில்லை. சிலை​களை வழி​பட்​ட​வர்​களை கீழ்​நி​லை​யில் பார்க்​க​வும் இல்லை. அனை​வ​ருக்​கும் வழி​பாடு சுதந்​தி​ரம் இருந்​தது.

சிலை​கள் இருக்​கட்​டுமே; இங்கு எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே, நாத்​தி​கம் பேசி​ய​வர்​க​ளின் சிலை​கள் உட்​ப​ட.
(தினமணி 16-03-2018)

 

Posted in Uncategorized | Leave a comment

படிக்கும் நேரம் கண்டறிவோம்!

சென்னையில் நடைபெற்ற 41-ஆவது புத்தகக் கண்காட்சி பெரும் ஆரவாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது. நாற்பத்தொரு ஆண்டுகளாக வாசிப்புக்கான திருவிழா நடைபெறுவது பெரிய விஷயம்தான். சென்னையில் தொடங்கியது, பின்னர் ஒரு பதிப்பாளரின் தனி முயற்சியில் கோவையில், அதன் பிறகு தமிழகத்தின் வேறு சில இடங்களில் வருடாந்திர விழாவாகிவிட்டது. புத்தகங்களுக்காக இப்படி நடப்பது வரவேற்கத்தக்கதுதான்.
புத்தகப் பிரியர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. சில மாதங்களாவது யோசித்து, ஆயிரக்கணக்கில் செலவழித்து பல்வேறு புத்தகங்களை வாங்கியிருப்பார்கள். அவர்களது அலமாரிகளில் தற்போது புத்தகங்கள் ‘நிரம்பி வழிந்தாலும்’ ஆச்சரியமில்லை.
புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகும் உடனடியாக இந்தப் பரபரப்பு நீடிக்கும். சில நாட்கள் நமக்குப் பிடித்த புத்தகங்கள், பிடித்த/ பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகள் என ஓரிரு புத்தகங்களையாவது வாசித்திருப்போம். அது பற்றிய நமது பதிவுகள், சமூக வலைதளங்களில் உலா வரும். சில புத்தகங்களைக் குறிப்பிட்டு ”இந்தப் புத்தகம் படித்துவிட்டீர்களா?” என்று பெருமையடிக்கவும் செய்யும்.
ஆனால் இவையெல்லாம் சிறிது நாள்களுக்குதான். பிறகு, படிக்காத புத்தகங்கள் அலமாரிகளில் உறங்கி கொண்டிருக்கும். அவசியம் படிக்க வேண்டும் என்று விரும்பி வாங்கிய புத்தகங்கள், பக்கம் கூட பிரிக்கப்படாமல் இருக்கும். அடுத்த புத்தகக் கண்காட்சி தொடங்கும் நேரத்தில்தான் அந்தப் புத்தகங்கள் பற்றிய நினைவுகளே வரும். ‘வாங்கிக் குவிப்பதற்கா வாங்கினோம்?’ என்ற கேள்வியும் நமக்குள் எழும்.
படித்து நம் திறனை அதிகரிக்க உத்தேசித்துதான் புத்தகங்களை வாங்குகிறோம். எனினும், உடனே படிக்காமல் போவதற்குப் பல காரணங்கள். முக்கியமான காரணம் நேரமின்மை. குடும்பம், அலுவல் சார்ந்த பணிகள், திடீரென முளைக்கும் இடையூறுகள், உற்றார் உறவினரோடு அரட்டைகள் என பல்வேறு கவனச்சிதறல்கள். சொல்லவே வேண்டாம் – இவற்றுக்கு இடையே நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட செல்லிடப்பேசி! அவற்றில் வரும் செய்திகள், தேவையும் தேவையில்லாமலும் வரும் அழைப்புகள், சமூக வலைதள அக்கப்போர்-அரட்டைகள் என சுழன்று கொண்டிருக்கிறது. இந்த நவீன யுகத்தில் அனைத்துக்கும் நேரம் கொடுத்தே ஆக வேண்டியுள்ளது. முக்கியமாக, புத்தகப் புழுக்கள் படிப்பதற்கும் ஓரிரு மணி நேரம் ஒதுக்கியாக வேண்டிய ஆசையும் நீடிக்கிறது.
சமூக வலைதளங்கள் மூலமாகவும் இன்றைய காலகட்டத்தில் வாசிப்புத் திறன் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் அவை நமது நேரத்தை உறிஞ்சுகின்றன. கல்வி மூலமாகவோ, அனுபவத்தின் வாயிலாகவோ கிடைக்காத விஷயங்களை, புதியதோர் உலகத்தை நமக்கு அறிமுகம் செய்வதே வாசிப்புத் திறனின் பயன்பாடு. இதை அன்றாட அரட்டைக் களமாக உள்ள சமூக வலைதளங்களால் நிறைவு செய்துவிட முடியுமா?
இன்றைய நிலையில், புத்தகக் கண்காட்சியில் வாங்கி அடுக்கிய புத்தகங்களைப் படித்து முடிக்க சில வழிமுறைகள் வேண்டியுள்ளது. அலமாரிகளில் நுழைந்துவிடாமல், மேஜைகளில் நூல்கள் நம் கண் பார்வையில் இருப்பதே சிறந்த உபாயம். ‘இவையெல்லாம் இந்த ஓராண்டுக்குள் படிக்க வேண்டிய நூல்கள்’ என்று அடிக்கடி நம்மை நாமே நினைவுப்படுத்திக் கொள்வோம்.
புத்தகங்களை நமக்கு விருப்பமான முறையில் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தாலும், அனைத்தையும் உடனே படிப்பது இயலாத காரியம்தான். ஆனால் முதலில் படிக்க நினைத்த புத்தகங்களை உடனடியாகப் படித்து முடிப்போம். சுவாரசியமான புத்தகங்களைப் படித்தால், வாசிப்புத் திறன் உற்சாகத்துடன் அதிகரிக்கும். நமக்கு நேரடிப் பயனுள்ள, துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பதும் வாசிப்புத் திறனை அதிகரிக்கும். அடுத்து, தகவல் திரட்டுவதற்காக வாங்கிய புத்தகங்களை முழுமையாகப் படிக்காவிட்டாலும், அவ்வப்போது எடுத்து குறித்து வைப்போம். இடையிடையே, பிற புதிய புத்தகங்களையும் சிறிது படிக்கலாம். இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டால், புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களை மட்டுமல்ல, ஏராளமான புதிய புத்தகங்களையும் படிக்க முடியும்.
நேர மேலாண்மை செய்வதற்கான அவசியம் இங்குதான் இருக்கிறது. தொலைதூர பயணங்களிலும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் நேரம் ஒதுக்கினால் விரும்பிய புத்தகங்களைப் படிக்க முடியும். விடுமுறை நாள்களில் புத்தகம் படிப்பதற்கென கணிசமான நேரம் ஒதுக்கவும் செய்யலாம்.
நமது அன்றாட பயன்பாட்டிற்கு செல்லிடப்பேசியின் தேவை இருக்கவே செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதிலும், அழைப்புகளைத் தவிர அதற்கு ஒரு வரையறை செய்வது நல்லது. படிக்கும் தருணத்தில் சமூக வலைதளங்களையும், மொபைல் இணைய வசதியையும் முடக்கி வைப்போம்! கூடுமான வரையில் கைக்கு எட்டாத தூரத்தில் செல்லிடப்பேசிகளை தள்ளி வைத்திருப்போம்! தினசரி இவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வதை விட, குறைந்தது இவ்வளவு பக்கங்களைப் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம். படிக்கும் நேரம் என்பதை அவரவர் சூழலுக்கு ஏற்ப நிர்ணயிப்பதே சிறந்தது.
அண்மைக்காலமாக, ‘கிண்டில்’ போன்ற மின்னணு வாசிப்புக் கருவிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் மூலம், உலகின் எந்த மூலையிலிருந்தும் புத்தகங்களை குறைந்த விலையிலோ, இலவசமாகவோ பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். இதனால் ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவித்து இடத்தை அடைப்பது குறையும். செல்லும் இடங்களில் எல்லாம் கைக்கு அடக்கமாக வைத்துப் படிக்கவும் முடியும். சில ஆயிரங்கள் தந்து ‘கிண்டில்’ போன்ற மின்வாசிப்புக் கருவிகளை வாங்க முடியாதவர்களுக்கு வசதியாக, மடிக்கணினி, செல்லிடப்பேசி போன்றவற்றிலேயே இதற்கென பிரத்யேக செயலிகள் இருக்கின்றன.
மனிதன் உருவாக்கியவற்றிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அற்புதமான, பயனுள்ள விஷயமே புத்தகங்கள்தான் என்றார் சிந்தனையாளர் தாமஸ் கார்லைல். அந்த அறிவு விந்தையில் மூழ்குவோம்!

(தினமணி 25-01-2018)

 

Posted in Uncategorized | Leave a comment

விருது பெற்ற மாணிக்க மாணவர்கள்

ன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்’ என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்ததுதான். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு சமூக நல அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவற்றில், “நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதி “மாணிக்க மாணவர்’ விருதினை வழங்கி வருகிறது.
கல்வியில் முதல் நிலை, நற்பண்புகள், தனித்திறன் ஆகியவற்றோடு சமூக கண்ணோட்டமும் கொண்ட மாணவர்களை அடையாளம் காணுவதே இந்த “மாணிக்க மாணவர்’ விருதின் நோக்கம். நிகழாண்டில் குறைந்தது ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்க இலக்கு நிர்ணயித்துள்ள “நல்லோர் வட்டம்’, ஜனவரி 12-ஆம் தேதி முதல் கட்டமாக 126 மாணவர்களுக்கு “மாணிக்க மாணவர்’ விருது வழங்கியது.
இதற்கான விழா சென்னை ஆவடியில் நடைபெற்றது. விருதுகளின் நோக்கம் குறித்து பேசிய “நல்லோர் வட்டம்’ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், “”கடந்த நான்காண்டுகளாக இந்த விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டில் 1,000 மாணவர்களை இலக்கு வைத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் நூறு பள்ளிகளிலிருந்து இதுவரை 500 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். கோவையிலும் மாணிக்க மாணவர்களைத் தேர்ந்
தெடுத்து வருகிறோம். வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் 1,000 “மாணிக்க மாணவர்”களையும் தேர்ந்தெடுத்து பயிற்சியளிப்போம். தனியார் பள்ளிகளுக்கும் நாங்கள் சென்று வந்தாலும், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். வருங்காலத்தில் நல்ல தலைவர்களாக இந்த மாணவர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்கிறார் பெருமிதத்துடன்.
இது தவிர, மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், தூய்மை, அருமையான சுற்றுச்சூழலைக் கொண்டிருத்தல், ஆசிரியர்கள்-நிர்வாகம்-பெற்றோர் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் “கல்விக் கோயில்’ விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆவடி காமராஜர் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி “கல்விக் கோயில்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விழாவிற்கு அம்பத்தூர் ஊருணி மையத்தின் தலைவர் இ.ந.சுதர்சனம் தலைமை தாங்கினார். “கல்விக் கோயில்’ விருதினை ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் வி.நடராஜன் வழங்கினார். “மாணிக்க மாணவர்’ விருதுகளை “பில்டிங் பாரத்’ அமைப்பின் தலைமை பிரசாரகர் சத்யகுமார் வழங்கினார். இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, முந்தைய ஆண்டுகளில் “மாணிக்க மாணவர்’ விருது பெற்ற மாணவ, மாணவிகள் முன்வந்து செய்திருந்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.

(தினமணி கொண்டாட்டம் 21-01-2018)

 

Posted in Uncategorized | Leave a comment

வலை தகவல் – மத்திய அரசுத் துறைகள்

28-08-2017

மத்திய வர்த்தகத் துறை

வலைதள முகவரி: www.http://commerce.gov.in

மத்திய இணை அமைச்சர்:
நிர்மலா சீதாராமன் (தனிப் பொறுப்பு)

இந்தத் துறையில், செயலர், கூடுதல் செயலர் (நிதி ஆலோசகர்), 4 கூடுதல் செயலர்கள், 14 இணை செயலர்கள் உள்ளிட்ட ஏராளமான உயரதிகாரிகள் பணியாற்றுகின்றனர். சர்வதேச பொருளாதார கொள்கை பிரிவு, வெளியுறவு கொள்கை பிராந்திய பிரிவு, ஏற்றுமதி தொழிலகப் பிரிவு உள்ளிட்ட 9 பிரிவுகள் இந்தத் துறையின் கீழ் செயல்படுகின்றன.

ஏற்றுமதியையும் வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் உத்தியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பொருளாதாரக் கொள்கையை வகுப்பதும், அதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார சூழல்களின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றியமைப்பதும் இதன் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று.
இதே வலைதளத்துடன், வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் துணை அலுவலகங்கள், 10 தன்னாட்சி அமைப்புகள், 5 பொதுத்துறை நிறுவனங்கள், 2 ஆலோசனைக் குழுக்கள், 14 ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள், 5 இதர அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகத் துறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் அளிக்கும் பதில்கள், தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்கள் பார்வைக்கு கிடைக்கின்றன. மேலும், வர்த்தகத் துறை சார்ந்த அறிவிப்புகளையும் இந்த வலைதளம் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.
வர்த்தகம் தொடர்பான அமைச்சரவைக் குழு நடத்தும் பயிலரங்குகள், டெண்டர் அறிவிப்புகள் போன்ற வர்த்தகத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆறாவது வர்த்தகக் கொள்கை ஆய்வறிக்கை புத்தக வடிவில் (பிடிஎஃப்) வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்கனிக் துறையில் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கு, கடந்த மூன்றாண்டுகளில் வர்த்தகத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களும் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன.

ரப்பர் வாரியம், தேநீர் வாரியம், காபி வாரியம் உள்ளிட்டவற்றுக்கான திட்டங்கள், உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான தகவல்கள், பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள், கூட்டறிக்கைகள் தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

“இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் அடைந்துள்ள வளர்ச்சிகள், வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் மாதம்தோறும் அடைந்து வரும் வளர்ச்சி விகிதங்கள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன.

04-09-2018

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

வலைதள முகவரி:  http://morth.nic.in/
அமைச்சர்: நிதின் கட்கரி,
இணையமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன், மன்சுக் எஸ்.மாண்டவியா
இந்தத் துறையின் பெயரில் இருப்பதைப் போலவே சாலைப் போக்குவரத்து பிரிவு, நெடுஞ்சாலைகள் பிரிவு என இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பது, அவற்றைப் பராமரிப்பது ஆகியவை நெடுஞ்சாலைகள் பிரிவின் பணிகள்.

மோட்டார் வாகன சட்டங்களை இயற்றி அமல்படுத்துதல், வாகன காப்பீடுகளைக் கண்காணித்தல், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை சாலைப் போக்குவரத்துப் பிரிவின் பணிகள்.

நாடு முழுவதும் 1 லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் அமைக்கும் பகுதிகளில் சராசரியாக ஒரு கி.மீ.க்கு 8.3 லட்சம் பேர் பயனடைவதாகவும் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு சாலைப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி புள்ளிவிவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கிடையிலான நுழைவு வரி ரத்து, தலைநகர் புது தில்லிக்கும் சென்னைக்கும் இடையிலான போக்குவரத்தில் 8 மணி நேரம் குறைந்தது, சரக்குக் கட்டணம் 15 சதவீதம் வரை குறைந்தது போன்ற தகவல்கள் கிடைக்கின்றன.

மோட்டார் வாகனம் தொடர்பான சட்ட வரைவுகள், விதிமுறைகள் தொடர்பான தகவல்கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை பிடிஎஃப் வடிவில் இருப்பதால், டவுன்லோட் செய்து படிக்கலாம்.

நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. நிகழ் நிதியாண்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.15,970 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.620 கோடி.

எல்லை சாலைகள் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சாலை கட்டுமான கழகம் உள்ளிட்ட தன்னாட்சி நிறுவனங்களின் வலைதளத் தொடர்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சாலைகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் புதிய தொழில்நுட்பங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, நெடுஞ்சாலைத் துறை மூலம் கோரப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டு வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

 

11-09-2018

மக்கள் குறைதீர்ப்புக்கு மத்திய அரசின் வலைதளம்!

|

வலைதள முகவரி: http://www.pgportal.gov.in
அரசுத் துறைகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதற்கான ஒருங்கிணைந்த மையமாக இந்த வலைதளம் இயங்கி வருகிறது.
பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ் இந்த வலைதளம் இயங்குகிறது.
பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை, பணியாளர் நலத் துறை, பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியத் துறை, மக்கள் குறைதீர்ப்பு இயக்குரகம், மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவை இந்த மனுக்களைக் கையாளுகின்றன.
அனைத்துத் துறைகளிலும் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அதிகாரிகளின் பெயர்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 87 அதிகாரிகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர மத்திய அமைச்சரவை செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் குறைதீர்வு அதிகாரிகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 52 துறைகள் தொடர்பான குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் விதம் குறித்தும் வலைதளத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, எத்தனை சதவீத குறைகள் தீர்க்கப்படுகின்றன என்பன குறித்த விவரங்கள் மாதாந்திர ஆய்வின்போது கேட்கப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21,54,979 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் 20,87,022 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. மாத தீர்வு சராசரி 96 சதவீதமாகும். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க 60 நாள்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

18-09-2018

மத்திய கப்பல் போக்குவரத்து துறை

|

மத்திய அமைச்சர்: நிதின் கட்கரி
இணையமைச்சர்கள் : பொன்.ராதாகிருஷ்ணன், மன்சுக் எல்.மாண்டவியா

வலைதள முகவரி: http://shipping.gov.in

நாட்டில் 7,500 கி.மீ. தூரத்துக்கு கடலோரப் பகுதி நீள்கிறது. மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களை கடலோரப் பகுதி கடக்கிறது. தற்போது நாட்டில் 200 துறைமுகங்கள் உள்ளதாகவும் 14,500 கி.மீ. தூரத்துக்கு நீர்வழி போக்குவரத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 200 துறைமுகங்களில், கடந்த 2015ஆம் ஆண்டு 100 கோடி டன்னுக்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து நடைபெற்றது.
2016 ஏப்ரல் மாதம், நாடு முழுவதும் நீர்வழி போக்குவரத்தை வேகப்படுத்துவதற்காக 12 துறைமுகங்களையும், 1,208 தீவுகளையும் தேர்ந்தெடுத்து மேம்படுத்தும் நோக்கில் “சாகர்மாலா திட்டத்தை’ மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.7.98 லட்சம் கோடியாகும்.
சாகர்மாலா திட்டம் நிறைவேற்றப்பட்டால் நீர்வழி போக்குவரத்தின் வேகம் அதிகரிப்பதோடு, இந்திய கடல் பகுதிகள் கடலோர பொருளாதார மண்டலமாக உயர்த்தப்படும். இதனால் வரும் 2025-க்குப் பிறகு, சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தில் ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி மிச்சப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆறு புதிய துறைமுகங்களில் தமிழகத்தின் சீர்காழியும், இனையமும் இடம்பெற்றுள்ளன.
கடலோர மாவட்டங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்கள் இடையே கப்பல் போக்குவரத்தின் மூலம் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்களிப்பு 7 சதவீதம் மட்டுமே. வரும் 2020ஆம் நிதியாண்டுக்குள் கப்பல் வழி சரக்குப் போக்குவரத்தின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
உள்நாட்டு கப்பல் போக்குவரத்து, குறிப்பாக கங்கை உள்ளிட்ட நதிகளின் வழியே சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக பல்வேறு குறுகிய கால, இடைக்கால, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

 

09-10-2018

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை

மத்திய அமைச்சர்: சதானந்த கெளடா
இணையமைச்சர் : விஜய் கோயல்

வலைதள முகவரி: http://www.mospi.gov.in/

மத்திய புள்ளிவிவர பிரிவும் திட்ட அமலாக்கப் பிரிவும் இணைந்து தனித் துறையாக கடந்த 1999-ஆம் ஆண்டில் உருவானது. புள்ளிவிவரத் துறையானது மத்திய புள்ளிவிவர மையம், கணினி மையம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம் என மூன்று உட்பிரிவுகளாகவும், திட்ட அமலாக்கப் பிரிவானது இருபது அம்ச திட்டம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் திட்ட கண்காணிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு என பிரிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. தேசிய புள்ளிவிவர கல்வி நிறுவனம் நாடாளுமன்ற சட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியிலான தகவல்கள், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஆய்வுகள், கணக்கெடுப்புகள் ஆகியவற்றின் மூலமாக புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இந்தத் துறையின் கீழ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன.

புள்ளிவிவரங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஜூன் 29ஆம் தேதியன்று தேசிய புள்ளிவிவர தினம் கொண்டாடப்படுகிறது.

“சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு, புள்ளிவிவரங்கள் குறித்த திறன் மேம்பாட்டு வகுப்புகளை, மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை நடத்தி வருகிறது. நவீன முறையில் கணக்கெடுப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக பயிற்சி அளிக்கிறது. இதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள முறைசாரா விவசாய நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பு வெளியிடப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் நிலவரப்படி கிராமப் பகுதிகளில் 1,43,179 முறைசாரா விவசாய நிறுவனங்களும், நகர்ப்புறங்களில் 1,46,934 முறைசாரா விவசாய நிறுவனங்களும் செயல்படுகின்றன.

ஆண்டுதோறும் தொழிற்கொள்கை துறை, நிலக்கரி, பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, ரயில்வே உள்ளிட்ட 14 துறைகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தொழில் உற்பத்தி குறியீடு அளிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி தொழில் உற்பத்திக்கான பொது குறியீடு 118.2 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.2 சதவீதம் அதிகமாகும்.

தேசிய சராசரி தனிநபர் வருமானம், காலாண்டுதோறும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆகியவை வெளியிடப்படுகின்றன.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பொருளாதார கணக்கெடுப்பின் முழு வடிவம் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

16-10-2018

மத்திய விமான போக்குவரத்துத் துறை

மத்திய அமைச்சர்: பி.அசோக் கஜபதி ராஜு
இணையமைச்சர்: ஜெயந்த் சின்ஹா

வலைதள முகவரி : http://www.civilaviation.gov.in/
நாட்டின் விமான போக்குவரத்தை மேம்படுத்தி, ஒழுங்குப்படுத்துவதற்காக தேசிய அளவில் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதே இந்தத் துறையின் செயல்பாடாகும்.

1934ஆம் ஆண்டின் விமானப் போக்குவரத்து சட்டம், 1937இன் விமானப் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவது இந்தத் துறையின் பிரதான பணி.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு, பொதுத்துறை நிறுவனங்களான இந்திய விமான நிலைய ஆணையம், பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாகத்தைக் கண்காணிக்கிறது.

நாட்டில் உள்ள சிறு நகரங்களை இணைப்பதோடு, நடுத்தர மக்களையும் விமானப் போக்குவரத்தின் பால் ஈர்க்கும் பிரதமரின் உதான் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரி, சேலம் போன்ற நகரங்களிலும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சிறு நகரங்களை இணைக்கும் பிராந்திய தொடர்புத் திட்டம் (ஆர்சிஎஸ்) பற்றிய முழுமையான தகவல்கள் இந்த வலைதளத்தில் கிடைக்கின்றன. இதன் மூலம், எத்தகைய தொலைநோக்குடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம்.

விமான சரக்குப் போக்குவரத்தை அதிகரித்தல், பசுமை விமான நிலையங்களை அமைத்தல், சுற்றுலா விமானங்களை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர / வருடாந்திர அறிக்கைகள், ஒதுக்கப்படும் நிதியுதவிகள், மானியங்கள் ஆகியவை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

23-10-2018

மத்திய தொலைத் தொடர்புத் துறை

மத்திய அமைச்சர் (தனிப்பொறுப்பு): மனோஜ் சின்ஹா
வலைதள முகவரி :  http://www.dot.gov.in

தொலைத்தொடர்பு சார்ந்த பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதற்காக, மத்திய தொலைத்தொடர்புத் துறை நிறுவப்பட்டது.

தொலைத்தொடர்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம், தொலைத்தொடர்பு பயிற்சி மையங்கள், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.

தொலைத்தொடர்புத் துறை சாந்த கொள்கைகளை வகுத்து அரசிடம் அனுமதி வாங்குதல், ஒவ்வொரு நிதியாண்டிலும் துறை சார்ந்த பட்ஜெட் தயாரித்து அரசிடம் தாக்கல் செய்தல், மத்திய அரசின் கொள்கைகளை தொலைத்தொடர்புத் துறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இந்தத் துறையின் பணிகளாகும்.

கடந்த 2012}இன் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை, 2004}இன் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) கொள்கை உள்ளிட்ட கொள்கைகளையும், தொலைத்தொடர்புத் துறை சார்ந்த சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

தொலைத்தொடர்பு ஆணையம், கடந்த 1989}ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

கடந்த 1999}ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புக் கொள்கை வெளியான பிறகு, தொலைத்தொடர்புத் துறை தாராளமயமாக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், தொலைத்தொடர்பு வசதிகள் மின்சாரம், சாலை வசதி, தண்ணீர் போன்று அத்தியாவசியமான அம்சங்களில் இடம்பெற்றுவிட்டது. 2004}ஆம் ஆண்டில் 776 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 2010}இல் 76 கோடி வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்தன.

தற்போது நாட்டில் வேகமாக வளர்ச்சியடையும் துறைகளில் ஒன்றாக தொலைத்தொடர்புத் துறை உள்ளது. மாதம்தோறும் 116 கோடி புதிய வாடிக்கையாளர்கள் இணைகின்றனர்.

அந்நிய நேரடி முதலீடு தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் ரூ.565.1 கோடிக்கு நேரடி அந்நிய முதலீடு கிடைத்தது.

 

 

 

(தினமணி வர்த்தகம் பக்கத்தில் பல்வேறு தேதிகளில் வெளிவந்த தொகுப்புகள்)

Posted in Uncategorized | Leave a comment

ஜி.எஸ்.டி: உண்மை என்ன?

ஜி.எஸ்.டி. வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், “ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும்’ என்று பிரபல ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டது.
அதே நாள், “ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் கேரளத்தில் தங்கம் விலை குறையும்’ என்று அந்த மாநிலத்தில் வெளியாகும் மலையாள மொழி நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டன. இதில் எது உண்மை?
கடந்த பல மாதங்களாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பி வந்த சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இந்தப் புதிய வரியால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரிகளுக்குப் பதிலாக, நாடு முழுவதும் சீரான வரி விகிதம் அமலாகிறது. வரி தொடர்பான நடவடிக்கைகளையும் மாநிலங்களுக்கிடையே வரிகளைப் பகிர்ந்தளிப்பதை ஒருங்கிணைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எனினும், புதிய வரியால் மாநிலங்கள் வசமிருந்த வரி வசூலிக்கும் உரிமை, மத்திய அரசு வசம் சென்றுவிடும் என்ற அச்சவுணர்வு எழுப்பப்படுகிறது. ஆனால், வரி வசூலை முறைப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கவில்லை என்கிறது மத்திய அரசு. வரி வருவாய் மாநில அரசுகளுக்கே அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், சில்லறை விற்பனையில் உள்ள அரிசி உள்ளிட்ட தானியங்கள், கோதுமை மாவு, பால், வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை. மற்ற பொருட்களுக்கு அவற்றின் தன்மைக்கேற்ப 5% முதல் 24% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
சுமார் 81 சதவீத பொருள்கள் 18 சதவீத வரம்புக்குள் அடங்கி விடுகின்றன. மீதியுள்ள 19 சதவீத பொருள்களுக்கு மட்டுமே 18 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பதால் ஏற்படும் லாபங்களை நாம் கணக்கிலெடுத்துப் பார்த்தாலே ஜிஎஸ்டி தொடர்பான அச்சவுணர்வு குறைந்து விடும். உதாரணமாக, தேயிலையின் விலை அஸ்ஸôம் போன்ற மாநிலங்களில் குறைவு. தென்னிந்தியாவில் அதிகம். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் – சரக்குப் போக்குவரத்து. தேயிலைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி விகிதம் வித்தியாசப்படுகிறது. தவிர, மாநில எல்லைகளில் விதிக்கப்படும் சுங்க வரிகள், மற்ற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கான வரிகள் அனைத்தும் சேர்ந்து விற்பனை வரியுடன் நுகர்வோர் தலையிலேயே விழும். விற்பனையாளர்களுக்கும் பல்வேறு இடங்களில் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவையெல்லாம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் குறையும். அதனால், பொருள்களின் மீது வீணாக சுமத்தப்படும் விலையும் குறையும். மேலும், வரி செலுத்துவதை முறைப்படுத்துவதால் கள்ளச் சந்தைகளில் விற்பதும், பொருள்களைக் கடத்துவதும் வெகுவாகக் குறையும். தொடக்கத்தில் இதனால் சில சிரமங்கள் தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் நன்மைகள் கிடைக்கும்.
வரி வருவாயில் மாநிலங்களின் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் வருவாயைப் பிரித்துத் தருவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிக வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் இடர்களைக் களைவதற்கு இந்தக் குழு ஆய்வு செய்யும்.
நாட்டின் தென் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.
தங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறித்த தகவலை ஒவ்வொரு ஊடகமும் அதனதன் வழியில் வெளியிட்டது போல, பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் குறித்து, பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட ஊகச் செய்திகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. அதனால்தான் அரசே விளம்பரம் வெளியிட்டு விளக்க வேண்டிய நிலை எழுந்திருக்கிறது.
எனவே குழம்பவோ குழப்பவோ அவசியமே இல்லை.
மேலும், இந்த வரி விகிதங்கள் எதுவும் நிரந்தரமல்ல. மறு ஆய்வுக்கு உள்பட்டது. ஜி.எஸ்.டி.விகிதங்களை அறிவித்த பிறகு பல்வேறு தரப்புகளில் வந்த எதிர்ப்பு, ஆலோசனைகளைப் பரிசீலிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 66 பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டது.
அகர்பத்திக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. கணினி பிரிண்டர்களுக்கு 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சினிமா டிக்கெட்டுக்கு வரி விகிதம் மாற்றப்பட்டது: ரூ. 100-க்கு குறைவாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி; ரூ.100-க்கு அதிகமாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் என முடிவெடுக்கப்பட்டது. குழந்தைகள் ஓவியம் வரையப் பயன்படுத்தும் நோட்டுகளுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்புடைய பொருள்களுக்கு வரி விதிப்பு விகிதத்தை மறு பரிசீலனை செய்யும் முறை உள்ளது என்பது தெளிவு.
இதைத் தவிர, மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் யோசனைகளையும் வரவேற்றுள்ளது. மேலும் @askgst_goi என்ற சுட்டுரைப் பக்கத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகின்றன. 1800-1200-232 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி-யைக் கண்டு அச்சப்பட்டுக் கொண்டிராமல், வரி சம்பந்தமான யோசனைகளையும் தெரிவிக்க வேண்டியது வர்த்தக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும். வரி விதிப்பில் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால், அதையும் மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் தெரிவிக்கலாம். தற்போதைய வரி விதிப்பு இறுதியானதல்ல என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல, ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வர்த்தகர்கள் தகவமைத்துக் கொள்ள முடியும். ஜி.எஸ்.டி. முறையை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மென்பொருள் துறையில் ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய புதிய நடைமுறை நாடு முழுவதும் அறிமுகமாகும்போது, சிக்கல் ஏற்படக் கூடியது சகஜம்தான். அவற்றை எதிர்கொண்டு, குறைகளை சரி செய்வதுதான் சரியான வழியாக இருக்கும்.
சில முக்கியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள்

வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள்

1. சில்லறை வணிகத்தில் விற்கப்படும் பேக் செய்யாத உணவு தானியங்கள்
2. வெல்லம்
3. பால்
4. முட்டை
5. தயிர்
6. லஸ்ஸி
7. சில்லறை வணிகத்தில் விற்கப்படும் பால் பன்னீர்
8. வணிக முத்திரையில்லாத இயற்கை தேன்
9. காய்கறிகள்
10. வணிக முத்திரையில்லாத கோதுமை மாவு
11. வணிக முத்திரையில்லாத பருப்பு
12. வணிக முத்திரையில்லாத மைதா
13. பிரசாதப் பொருள்கள்
14. உப்பு
15. கர்ப்பத் தடை மாத்திரைகள்
16. மருத்துவ சேவைகள்
17. கல்வி சேவைகள்

5% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. சர்க்கரை
2. தேநீர்
3. வறுத்த காப்பி கொட்டை
4. பால் பவுடர்
5. சமையல் எண்ணெய் வகைகள்
6. குழந்தைகளுக்கான பால் உணவுகள்
7. பாக்கெட் செய்யப்பட்ட பால் பன்னீர்
8. துடைப்பம்
9. செய்தித்தாள்கள்
10. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய்
11. சமையல் எரிவாயு
12. நிலக்கரி

12% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. நெய்
2. செல்லிடப்பேசி
3. வெண்ணெய்
4. நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகள்
5. முந்திரி
6. பாதாம்
7. பழச்சாறுகள்
8. பாக்கெட், பாட்டிலில் அடைக்காத தேங்காய் எண்ணெய்
9. குடை
10. ஊதுபத்தி

18% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. கேசத் தைலம்
2. சோப்
3. மூலதனப் பொருள்கள்
4. தொழில்துறை இடைத்தரகுகள்
5. கார்ன் ஃப்ளேக்ஸ்
6. ஜாம்
7. பாஸ்டா
8. சூப் வகைகள்
9. கழிவறைத் தாள்கள், முகம் துடைக்கும் தாள்கள்
10. இரும்பு
11. கணிப்பொறி
12. இங்க் பேனா

24% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. வாசனை திரவியங்கள்
2. சிமென்ட்
3. அழகு சாதனங்கள்
4. சூயிங் கம்
5. பட்டாசுகள்
6. மோட்டார் சைக்கிள்

 

பெட்டிச் செய்தி 1

1,211 பொருள்களுக்குப் புதிய வரி விகிதம்!

ஜிஎஸ்டி தொடர்பான ஒருமித்த கருத்துகளை ஏற்படுத்துவதற்காகவும், வரி விகிதங்களை விவாதிப்பதற்காகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் சார்பில் இதுவரை 16 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஜிஎஸ்டி வரம்புக்குள் இதுவரை 1,211 பொருள்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பெட்டிச் செய்தி 2

காணாமல் போகும் வரிகள்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் கீழ்க்கண்ட வரிகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்கப்படுகின்றன:
1. மத்திய உற்பத்தி வரி (சி.இ.டி)
2. சொத்து வரி
3. வர்த்தக வரி
4. மதிப்புக் கூட்டு வரி
5. உணவு வரி
6. மத்திய விற்பனை வரி (சி.எஸ்.டி)
7. பொழுதுபோக்கு வரி
8. நுழைவு வரி
9. கொள்முதல் வரி
10. சொகுசு வரி
11. விளம்பர வரி
12. லாட்டரி வரி
13. சுங்கத் தீர்வை

 

(தினமணி வர்த்தகப் பக்கம் – 12-06-2017)

 

Posted in Uncategorized | Leave a comment

அப்பா – சிறுகதை

அப்பா இல்லை. போய் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் வந்த போது, அழத் தோன்றவில்லை மகாவுக்கு.
அவர் மறைவுக்கெல்லாம் அழுது கண்ணீரைத் தீர்த்துடக் கூடாது என்று தீர்மானித்தாள். அப்பாவை நினைக்கும் போதெல்லாம் நல்ல சம்பவம் எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவரது குணமும், அதனால் பாதிக்கப்பட்ட தனது இளம் பருவம் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தது,
அவர் சாவுக்குப் போக வேண்டுமா? என்று யோசித்தாள். பதினைந்து ஆண்டுகளாக அறுபட்டிருந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டாமே என்று கூட நினைத்தாள். ஆனால், கோபம் அப்பா மீதுதான். வீட்டில் உள்ள மற்றவர்களிடம் இல்லை என்பதால் அவர்களையாவது பார்க்க முடியும் என்ற நப்பாசை எழுந்தது.
குமார் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. மகளுக்கு இது பத்தாம் வகுப்பு. அவளைக் கூட்டிக்கொண்டு போக முடியாது. தாத்தாவின் முகத்தை பேத்தி பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இப்படி ஓர் உறவு இருப்பது அவளுக்குத் தெரியாமல் போவதே நல்லது.
குமாரை அலைபேசியில் அழைத்தாள்.
“அப்பா செத்துட்டாருன்னு தங்கச்சி போன் பண்ணா. போயிட்டு வர வா?” என்று கேட்டாள்.
“அதுக்கு எதற்கு அனுமதி? மாமாவைப் பார்க்க நானும் வர்றேனே” என்று கேட்டான் குமார்.
“அதெல்லாம் வேணாம். எனக்கே அந்தாள் அப்பனில்லன்னு சொல்றேன். மத்தவங்கள பார்க்கதான் நானே போறேன். உங்களுக்கு மட்டும் என்ன மாமா உறவு? நீங்க வர வேணாம். நான் திரும்ப வர்ற வரைக்கும் சீக்கிரமா வீட்டுக்கு வந்து பாப்பாவை பார்த்துக்கோங்க” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
நான்கு நாள் தங்குவதற்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டாள். வீட்டைப் பூட்டினாள். அப்பாவின் மேல் இருந்த கோபம் பூட்டைப் பூட்டும் போது தெரிந்தது. சாவியை மேல் வீட்டில் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
****
நான்கு மணி நேர பேருந்துப் பயணத்தில் இளமைக் கால நினைவுகள் ஒவ்வொன்றாக வந்து சென்றன. வீட்டுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்ததால் தனக்கு மகாலட்சுமி என்ற பெயர் வந்ததைத் தவிர, வேறு எந்த நன்மையும் தான் அடைந்ததாகத் தெரியவில்லை. அவள் மட்டுமல்ல, அவளுக்குப் பிறகு பிறந்த இரண்டு தங்கைகளும், கடைசியாகப் பிறந்த தம்பியும்தான்.
தம்பியும் இப்போது வளர்ந்திருப்பான். “இருபது வயசு இருக்குமா, அவனுக்கு?’ என்று கேட்டுக் கொண்டாள். அடிப்பதில் பெரியவர், சிறியவர் என்ற வித்தியாசத்தை அப்பா பார்த்ததே இல்லை. ஐந்து வயது தம்பி ராமுவுக்குக் கூட நல்ல அடி கிடைக்கும்.
பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கக்கூடாது என்பதற்கு அப்பாதான் உதாரணம். வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் அடி, உதைதான். பெண் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று யாராவது சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும். “எல்லாம் எனக்குத் தெரியும். வந்துட்டானுங்க புத்தி சொல்ல” என்பார்.
அப்பா வீட்டிற்குள் வந்துவிட்டாலே மயான அமைதி நிலவும். எப்போது அவருக்குக் கோபம் வரும் என்பது யாருக்கும் தெரியாது. கோபம் வந்தால் மாட்டியவர்களின் கதி அதோகதிதான். அடிக்கடி அம்மாதான் மாட்டிக்கொண்டாள். அந்த காலத்து பெண்மணி அவர். குழந்தைகளுக்காக எதையும் தாங்கும் மரமாகிப் போனார்,
அடுத்தபடியாக, மூத்த மகள் என்பதால், மகாவுக்குதான் அதிக அடி கிடைக்கும். அதனால், அவளுக்கு அப்பாவைப் பிடிக்காது. அம்மாவைப் போல அவள் அமைதியாகவும் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்பாவிடம் எதிர்த்துப் பேசுவாள். அடி இன்னும் பலமாக விழும்.
மற்றபடி மூன்று பெண்களையும் கடைக்குட்டி பையனையும் அப்பா நன்றாகவே படிக்க வைத்தார். படிக்க வைப்பதில் பாலின பாகுபாடு காட்டுவது அவருக்குப் பிடிக்காது. ஆனால், அதெல்லாம் ஏன் தனது மனதில் நிற்கவில்லை என்பது அவளுக்கு இன்னும் புதிர்தான்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு கொடுமையையும் அவள் சந்தித்தாள். கல்லூரிக்கு அனுப்பி விட்டு, மகளுக்குத் தெரியாமல் அப்பா பின்தொடர்வார். என்றாலும், மகாவுக்கு அது புரிந்தே இருந்தது.
“ச்சே… என்ன அப்பா இவர்’ என்று உடம்பெல்லாம் கூசும்.
படிப்பு முடிந்ததும், அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினாள். ஒரு விடுதியில் தங்கி அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த போதுதான், குமாரைச் சந்தித்தான். அவளுடைய நிலைமை புரிந்தும், குமார் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டான். இருவரும் திருமணம் செய்துகொண்டு அப்பாவின் முன்னால் நின்றார்கள். ஏறிட்டுப் பார்த்து, “இந்த ஓடுகாலி இப்படி செய்யும்னு நெனச்சேன். உன்ன…” என்று சொல்லிவிட்டு கை ஓங்கினார்.
குமார்தான் தடுத்தாள். மகாவுக்கு கோபம் வந்தது.
“நீ யாருய்யா என்ன ஓடுகாலின்னு சொல்ல. நீ ஒழுங்கா வளர்த்திருந்தா, நான் ஏன் ஓட போறேன்?” என்று கேட்டு விட்டு, குமாரை இழுத்துக்கொண்டு வெளியேறினாள். அதன் பிறகு பிறந்த வீட்டின் பக்கம் மகா தலை வைத்து கூட படுக்கவில்லை. இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த செய்தி தோழிகள் மூலம் வந்ததோடு சரி.
குமாருக்கு மகாலட்சுமியைப் பற்றி புரிந்ததால் புகுந்த வீட்டில் பிரச்னை எதையும் அவள் சந்திக்கவில்லை. மகள் பிறந்ததும் பழைய வாழ்க்கை கனவு போல ஆனது. அப்படியும் சில நேரங்களில் இளம் பருவ நினைவுகள் அவளுக்குள் தலைதூக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் துடித்து போவாள்.
****

“வேலூர் வந்தாச்சு. இறங்குங்க” என்றார் கண்டக்டர். மகா இறங்கி கொண்டாள். பேருந்து நிலையத்தில் இருந்து பத்து, பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்குச் சென்றுவிடலாம். சொந்த வீடு என்பதால் வீடு மாறவில்லை. பெரிய தங்கை போன் செய்து தகவல் சொல்லும்போது, அப்பாவுடன், அம்மாவும் கடைசி தங்கையும் மாப்பிள்ளையும் உடனிருந்ததாகச் சொன்னாள். தம்பியும் அப்பாவுடன் தான் இருந்திருப்பான்.
வீட்டிற்குள் நுழைந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தது. மகாவைப் பார்த்தவுடன் சொந்தங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். தான் இருப்பது அப்பாவின் இறுதி காரியத்தில் என்ற நினைப்பு வர உடனே அமைதியாக அப்பாவின் உடல் பக்கம் நகர்ந்தாள்.
அப்பாவின் பிணத்திற்கு அருகில் அழுதழுது கலங்கிய கண்களோடு அம்மாவும், தங்கைகளும் அமர்ந்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மகளை பார்த்த அம்மா, “நம்மை விட்டு போயிட்டாருடீ…” என்று பெருங்கூச்சலிட்டு அழத் தொடங்கினாள். இரண்டு தங்கைகளும் பின்னணியில் கூச்சலிட்டார்கள். மகாவுக்கு அழுகை வரவில்லை. கல்லைப் போல அமர்ந்திருந்தாள்.
“என்ன இருந்தாலும் பெண் பிள்ளைக்கு இவ்வளவு ரோஷம் கூடாதும்மா” என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் எழுந்தது. மகா கோபமாகக் கண்களை சுழற்றினாள்.
ஓர் இளைஞன், “உஷ்.. உஷ்..’ என்று அதட்டினான். அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களும் கலங்கியிருந்தன. அவன் தான் ராமு என்பதை உணர்ந்து கொண்டாள்.
அரவணைப்பாக அவன் தோளைத் தொட்டாள். அக்காவின் தொடுதல் அவனுக்கு அழுகையை வரவழைத்தது.
“அக்கா…” என்று விசும்பத் தொடங்கினான். அவளுக்கு ஏனோ வெறுப்பு வந்தது. கையை எடுத்துக் கொண்டு, பார்வையை அக்கம் பக்கம் சுழல விட்டாள்.
தங்கைகளோடு இரண்டு, மூன்று குழந்தைகளும் இருந்தன. ஒரு பையன் அழகாகப் புன்னகைத்தான். மகா சூழ்நிலையை மறந்து, அவனை நோக்கி கைகளை நீட்டினாள். இரண்டாவது தங்கை அவனை தரதரவென்று இழுத்து வைத்துக்கொண்டு, மகாவை முறைத்தாள்.
“”நேரமாச்சு… தூக்கணும். வாய்க்கரிசி போட எல்லோரும் வாங்க” என்று குரல் கேட்டது. எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள். மகாவும் போட்டாள். போடும் போது, “”உனக்கெல்லாம் தண்டச் சோறு போடணும்னு என் தலையெழுத்து” என்ற அப்பாவின் குரல் ஒலித்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.
இறுதிச்சடங்கு முடியும் வரை மகாவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஊராரும், சொந்த பந்தங்களும் மகாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சி சேர்ந்தனர். அவள் எதையும் சட்டை செய்யவில்லை.
இரண்டு நாட்கள் கழிந்தன. மகா அம்மாவின் வீட்டில் தான் தங்கியிருந்தாள். வீட்டில் மற்றவர்களோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினாள். மகள் இரண்டு நாட்களாக கூட இருப்பது அம்மாவுக்கு ஆறுதல் என்றாலும், அதை சொல்லக் கூடிய மனநிலையில் இல்லை.
அப்போது ஒருவர் துக்கம் விசாரிக்க வீட்டிற்குள் நுழைந்தார்.
“”ஐயா செத்த அன்னைக்கு ஊர்ல இல்லேம்மா… அவர் போனது ரொம்ப சங்கடமா இருக்கு” என்று அம்மாவிடம் ஆறுதலாகப் பேசினார்.
பிறகு அவரது கண்கள் நாலாப் பக்கமும் சுழன்றன. மகாவைப் பார்த்தது நெற்றியை சுருக்கினார். ராமு மெதுவாக, “இவங்கதான் பெரிய அக்கா” என்றான்.
“ஓ… நீதானா தாயி அது… நீ ஊர விட்டு போனதுக்கு அப்புறம்தாம் நான் உங்க அப்பாவுக்குப் பழக்கம். என் பொண்ணு பேரும் மகாலட்சுமிதான். அதனாலேயே எங்க வீட்டுக்கு ஐயா அடிக்கடி வருவாரு. அந்த மகாலட்சுமிய தான் புரிஞ்சுக்காம விரட்டிட்டேன். இந்த மகாலட்சுமி கிட்டயாவது ஆறுதல் கிடைக்குமேன்னு வர்றேன்னு சொல்லுவாரு…” என்று அவர் பேசிக் கொண்டே போனார்.
அதற்கு மேல் அவர் பேசியது எதுவும் மகாவின் காதில் விழவில்லை. மீறி வந்த அழுகையை அவளால் அடக்க முடியவில்லை.

 

(தினமணி கதிர் – 23-04-2017)

 

 

Posted in Uncategorized | Leave a comment