அரசியல் கூடாது

அண்மைக் காலத்தில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் “அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை நாம் அடைய முடியவில்லை. பள்ளிப் பருவத்திலேயே படிப்பை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
தொழில்நுட்ப வசதிகளை குழந்தைகள்கூட சரளமாகப் பயன்படுத்தி வரும் இன்றையச் சூழலில், கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் போதுமான அளவில் இன்னமும் நுழையவில்லை. புத்தகச் சுமை உள்ளிட்ட தடங்கல்களால், பெரும்பாலான மாணவர்களுக்கு சுகமான கல்வி அனுபவமும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில்தான், புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. அது தொடர்பான கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டது.
அந்த அறிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் கிளம்பின. எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் காரணங்களை முன்னிட்டே புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே காரணங்களை அடுக்கி, கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்.
ஆனால், வரைவு அறிக்கையைப் படிப்பவர்களுக்கு, அதைத் தயாரித்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவின் ஆதங்கம் புரிய வரும். உண்மையில், சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளாகி விட்டாலும், “அனைவருக்கும் கல்வி’ என்ற இலக்கை அடைய முடியவில்லையே, தேவையான உயர்கல்வி பெறாமல் படிப்பை இடையிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லையே என்ற ஆதங்கமே இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது.
எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாததால், பல பள்ளிகளில் பாடம் நடத்துவதில் தடங்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உரிய காலத்தில் வழங்கப்படாமல் மறுக்கப்படுகிறது.
எனவே, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தேர்வு கூடாது என்றும், அதற்கு மேல் வகுப்புகளில் படிப்பவர்களுக்கு தேர்வுகள் அவசியம் என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பரிந்துரையால் அடித்தட்டு மக்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். இதை விடவும் மோசமாக அந்த மக்களை இழிவுபடுத்தி விட முடியாது.
தரமான கல்வியைப் பெற்றதால், சமூகத்தில் நல்ல நிலையில் முன்னேறியுள்ள அடித்தட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவை தரமான கல்வி மட்டுமே. அது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், கல்வியை போதிப்பதோடு நின்று விடக் கூடாது. மாறி வரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப எதிர்காலத் தலைமுறையினரை தயார் செய்ய வேண்டியது அவசியம்.
கல்வி மட்டுமின்றி, அவரவருக்கு விருப்பமான துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கும் மாணவர்கள் சுயமாகச் சிந்திப்பதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.
அண்மையில், முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த 300-க்கும் மேற்பட்டோரில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றதாக ஒருவர் கூறினார்.
இன்றைய கல்விமுறையால் சிறந்த நிபுணர்களை உருவாக்க முடியவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்நிலை மாற வேண்டும்.
படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் சிறுவனால், மனக் கணக்குகளை சரியாகப் போட முடியுமானால், அவனால் பள்ளிப் பாடங்களை ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல், வேத கணிதம் போன்றவற்றால், சாதாரண மாணவர்கள் கணக்குகளை எளிய முறையில் புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அத்தகைய முறைகளை கல்வித் திட்டத்தில் ஏன் புகுத்தக் கூடாது? மாணவர்களை மேம்படுத்தும் வகையில் கல்வி அமைய வேண்டும்.
மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்வது அவசியம். அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தகுதித் தேர்வுகளை நடத்துவது, அவர்களது திறமைகளை மேலும் மெருகூட்டுமே தவிர குறைத்துவிடாது.
அடுத்து, தேசிய கல்விக் கொள்கையால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், கல்வி சார்ந்த உள்ளூர் பிரச்னைகளைக் களைவதற்கு மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
அனைவருக்கும் கல்வியை அளிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறது. சமூக அறிவியல் பாடத்திட்டத்தைத் தயாரிப்பது, கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
மேலும், கல்வியளிப்பதில் நிலவும் ஏற்றத்தாழ்வு, அடித்தட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பது ஆகியவற்றையும் பேசுகிறது. தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, பிற இந்திய மொழிகளைக் கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
மாறி வரும் சூழலுக்கு ஏற்பவே புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பரந்த தேசத்தில் ஒரே
விதமான கல்வி முறையைப் புகுத்துவது எளிதல்ல. எனவே, புதிய கல்விக் கொள்கையில் சில மாறுபட்ட கருத்துகளும் எழக்கூடும்.
அவை ஆளும்கட்சி மீதான கோபத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.
கல்வி என்பது அரசியலுக்கான களமல்ல; எதிர்கால இந்தியாவின் வாழ்க்கை என்பதை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

(தினமணி 19-09-2016)

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s