வேண்டாம் பிரிவினை கோஷம்

“தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு’ என்று பாடினார் நாமக்கல் கவிஞர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாம். ஐவகை நிலங்களாகப் பிரிந்து குன்றாத இலக்கிய வளங்களுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நாம். அதே நேரத்தில், இந்திய ஒருமைப்பாட்டுடன் தமிழகம் ஒன்றியிருந்ததற்கான ஆதாரங்கள், இமயமலையில் சேர மன்னன் கொடி நாட்டியது முதல் சங்க காலம் தொட்டு ஏராளமாக உள்ளன.
அந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாகவே, விடுதலை வேள்வியில் தமிழர்கள் முன்னணியில் இருந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த எத்தனையோ வீரர்கள், மற்ற மாநிலத்தவருக்கும் விடுதலை தீயை மூட்டினார்கள். விவேகானந்தர் போன்றவர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் தமிழர்களே. சுதந்திர இந்தியாவின் கட்டமைப்பிலும் ராஜாஜி, காமராஜர் போன்ற தமிழகத் தலைவர்களின் பங்களிப்பு அதிகம். அதே போல், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிபுணர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமானது. இதைக் கொண்டு பல்வேறு சாதனைகள் தமிழகம் மேற்கொண்டிருக்க முடியும்.
ஆனால், “இந்தியரும் தமிழரும் வேறு, வேறு’ என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் “தனித் தமிழ்நாடு’ கோரிகை தீவிரமடைந்தது. “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்ற கோஷம் முழங்கியது. சீன யுத்தத்துக்குப் பிறகு, தனி திராவிட நாடு என்ற வாதம் கைவிடப்பட்டது. அதன் பிறகே, தமிழக ஆட்சியில் திராவிட இயக்கங்கள் அமர முடிந்தது. இடையில் அவ்வப்போது தனிநாடு கோஷங்கள் எழுந்தாலும், மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அண்மைக் காலமாக தனிநாடு கோஷங்கள் மீண்டும் கட்டாயமாகத் திணிக்கப்படுவதுதான் வேதனையளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகளை நீதிமன்றங்கள் தடை செய்தன. எனவே, ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழர்கள் ஒன்றுபட்டு எழுந்தது வரவேற்கத்தக்கதுதான். தமிழகம் முழுவதும் உருவெடுத்த மாணவர் எழுச்சி, மற்ற மாநிலத்தவருக்கும் உத்வேகம் அளித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால், அந்தப் போராட்டக் களத்தில் தமிழர்கள் நசுக்கப்படுவதாக பிரசாரம் செய்தற்குக் காரணம் என்ன? உரிமைக்காகப் போராடுவதை விடுத்து, இந்திய எதிர்ப்பைக் காட்டுவதில் பயனென்ன? இறுதியில், மாபெரும் போராட்டம், வன்முறையில் முடிந்து கறை படிந்துவிட்டது.
மேலும், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடகம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கர்நாடகம் சமயோசிதமாக செயல்படுவதை தமிழகம் உணர வேண்டும்.
இங்கு அரசியல் காரணங்களுக்காக எழுப்பப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் முழுமையாகப் புறக்கணித்தனர். அதே நேரத்தில், இந்தியாவின் ஒருமைப்பாட்டுடன் இணைந்து தங்களது மாநிலங்களை வலுப்படுத்திக் கொண்டனர். கர்நாடகமும், ஆந்திரப் பிரதேசமும் அரசியல் ரீதியாகத் தங்களை வளப்படுத்திக் கொண்டன என்றால், கேரளம் அதிகாரிகள் மட்டத்தில் பலம் பெற்றது. ஆனால், தமிழர்களாகிய நாமோ இனவாதம் பேசி நமக்குள்ளேயே அடித்துக் கொண்டோம்.
பஞ்சாப், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் மீனவர்கள் தாக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேசிய உணர்வுடன் குரல் எழுப்புகின்றன. ஆனால், ராமேசுவரத்திலும் நாகையிலும் மீனவர்கள் தாக்கப்பட்டால், அதை தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதாக மட்டுமே கூறுகிறோம். குறுகிய மனப்பான்மையை விடுத்து இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதாகக் குரலெழுப்பினால் மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இந்திய அரசுடன் இணைந்து இலங்கையை எதிர்ப்பதற்குப் பதிலாக, மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் இந்திய அரசையும் தூற்றுகிறோம். இவர்கள் கேட்பதைப்போல தமிழகத்தைப் பிரித்துவிட்டால், இலங்கை கடற்படை நமது மீனவர்களைத் தாக்குவது சுலபமாகிவிடும் என்பதே யதார்த்தம்.
நெடுவாசல் போராட்டம் வெடித்தபோது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒட்டுமொத்த தமிழினமும் விழித்திருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சிலர் அணு மின் நிலையம், இயற்கை எரிவாயு போன்ற திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக, பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பிரிவினையை விரும்பாத பெரும்பாலான மக்கள், இது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் என்று அமைதியாகி விட்டனர்.
உண்மையில், கூடங்குளம், கல்பாக்கம் மட்டுமல்லாது குஜராத், ஆந்திரம், ராஜஸ்தான், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் அணு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை எரிவாயு திட்டத்துக்கு நாடு முழுவதும் 39 இடங்களில் அனுமதியளித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றில், தமிழகத்தில் நெடுவாசல் மற்றும் புதுவையில் உள்ள காரைக்கால் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவையே. இதை மறைத்து, பொய்யான பிரசாரங்களின் மூலம் உணர்ச்சி வேகத்தைத் தூண்டுவது, தமிழர்களை இழிவுப்படுத்தும் நடவடிக்கை அல்லவா? இதேபோன்ற தவறான பிரசாரங்கள்தான், முல்லை பெரியாறு விவகாரத்திலும் எழுப்பப்படுகின்றன. இலங்கை தமிழர்களில் கணிசமானோரின் பூர்வீகம் கேரளமே. இப்படியிருக்கும் போது, தமிழர்களின் உறவுகளான மலையாள மக்களை பிரிப்பது சரியல்ல.
நாம் ஒப்புக்கொண்டாலும், மறுத்தாலும் இந்திய மண்ணுடன் வலுவாக இணைந்திருப்பதுதான் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழகத்திற்கு நன்மை தரும் என்பதே யதார்த்த உண்மை. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று உரக்க சொன்ன தமிழர்களுக்கும் அந்த வாக்கியம் பொருந்தும். அதை மனதில் கொண்டு ஒருமைப்பாட்டைப் பேணி காத்தால் தமிழகம் நிச்சயம் வளம் பெற முடியும்.

(தினமணி 14-03-2017)

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s