கசப்பான உண்மை

÷கடந்த சில ஆண்டுகளாகவே மழை தமிழர்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையால், சென்னை உள்பட சில மாவட்டங்கள் நீரில் மூழ்கின. ஆனால், நிகழாண்டிலோ மழை பொய்த்து, வறட்சியால் மடிகிறோம்.
÷தொழில்நுட்பமும் நகரமயமாகும் வாழ்க்கை முறையும் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், நம் நாட்டில் 60 சதவீத மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். அவர்களின் தரத்தை மேம்படுத்த இத்தனை ஆண்டுகளில் தகுந்த முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? வறட்சி போன்ற சூழல்களில் விவசாயம் சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடுவதற்கு விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
÷முன்பெல்லாம் கோயில்கள் கட்டப்படும் இடங்கள் தோறும் குளங்களும் அமைக்கப்படும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் தமிழர் வாழ்வின் விழுமியங்களைப் பேசுபவை. ஆனால், அவற்றின் இன்றைய நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
÷சென்ற ஆண்டில் பெய்த மழைநீரை ஏரிகள், முறையாக சேமித்து வைத்திருந்தாலே, தற்போது நிலவும் வறட்சியை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஏரிகளும் குளங்களும் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், உபரியாகக் கிடைக்கும் மழைநீர் சேமிக்க வழியில்லாமல் வீணாக கடலில் கலக்கிறது.
÷இதுபோன்ற நிலைமைகளை சீரமைப்பது நீர்பாசனத் துறையின் பணியாகும். மொழி வாரி மாநிலமாக, சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகம் பிரிந்தது முதலே அங்கு நீர்ப்பாசனத்துக்கு என தனியாக ஒரு அமைச்சகம் செயல்படுகிறது. காவிரி நீர் பிரச்னையாகட்டும், மற்ற நீர் பிரச்னைகளாகட்டும் கர்நாடகத்தின் சார்பில் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது முதல் கோடை வெப்பத்துக்கு ஏற்ப நீர்நிலைகளை அமைப்பது வரை பல்வேறு பணிகளில் அந்த அமைச்சர் ஈடுபடுகிறார். ஆனால், அதை விடவும் அதிகமான நீர்நிலைகளை வைத்திருந்த தமிழகத்தில் நீர்பாசனத்துக்கென தனி துறை உருவாக்கப்பட்டு, அதற்கான அமைச்சர் நியமிக்கப்படவில்லை.
÷மேலும், தனி வாரியத்தை அமைத்து விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்கள் குறித்த முறையான கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை மட்டுமாவது கட்டாய விவசாயக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடைகள் பராமரிப்பு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண் துறையை தரமுயர்த்துவது தொடர்பான சான்றிதழ் கல்விகள் அளிக்கப்பட வேண்டும்.
÷தொழில் துறையும் நவீன தொழில்நுட்பங்களும் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில், விவசாயத் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதில், விவசாயத் துறை மேம்பாடு, வறட்சி சூழலை சமாளிப்பது, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளைப் பரிசீலித்து, உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். முக்கியமாக, கால்நடைகளைப் பராமரிப்பின் மூலம் ஏற்படும் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
÷பல மாதங்கள் உழைத்து அறுவடை செய்ததற்கான பலன்களை விவசாயிகள் நேரடியாகப் பெற முடிவதில்லை. இடைத்தரகர்கள் மூலமாகவே உற்பத்திகளை சந்தைப்படுத்த நேரிடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நஷ்டமும் அடையும் நிலை உள்ளது. மாறாக, தங்கள் உற்பத்திப் பொருளுக்கு உரிய லாபத்தை விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் விதைத்த பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்துவதை மத்திய-மாநில அரசுகள் ஊக்குவிப்பது அவசியம். அதற்கான திட்டங்களை அமல்படுத்துவதோடு, அது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அரசின் கடமை. சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டந்தோறும் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டதால், விவசாயிகளும் நுகர்வோரும் பெருமளவில் பயனடைந்தனர். ஆனால், அதிலும் குறைகள் ஏற்பட்டதால், பிற்காலத்தில் அந்தச் சந்தைகள் காணாமல் போயின.
÷மேலும், சமீப காலங்களில் இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வம் நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலை பயன்படுத்தி இயற்கை பொருள்களைத் தயாரிப்பது தொடர்பாக, விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
÷விவசாயத்துக்குத் தேவைப்படும் விதைகளின் விற்பனை தனியாரிடமே இருக்கிறது. இதனால், அதிக விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டங்களைக் கணக்கிட்டு, விவசாய நிலங்களை பலர் விற்று விடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால், விதைகளின் விற்பனையை அரசே ஏற்க வேண்டும்.
÷பயிரிடும் காலம் முதல் அறுவடை காலம் வரை விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்குரிய பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 2-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அதை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை. டன் கரும்புக்கு ரூ.2,500 குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டாலும், நடைமுறையில் பல்வேறு இடைத்தரகர்களிடம் சிக்கிக் கொண்டு, ரூ.1,000 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பிற உற்பத்தியாளர்களுக்கு நிர்ணயித்திருப்பதுபோல விவசாயிகளுக்கும் உரிய லாபத்துடன் அதிகபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
÷விவசாயிகளின் இத்தகைய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாத வரை, விவசாயத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறுவதையோ, அவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பதையோ தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை.

 

(தினமணி 16-01-2017)

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment