அப்பா – சிறுகதை

அப்பா இல்லை. போய் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் வந்த போது, அழத் தோன்றவில்லை மகாவுக்கு.
அவர் மறைவுக்கெல்லாம் அழுது கண்ணீரைத் தீர்த்துடக் கூடாது என்று தீர்மானித்தாள். அப்பாவை நினைக்கும் போதெல்லாம் நல்ல சம்பவம் எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை. எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவரது குணமும், அதனால் பாதிக்கப்பட்ட தனது இளம் பருவம் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தது,
அவர் சாவுக்குப் போக வேண்டுமா? என்று யோசித்தாள். பதினைந்து ஆண்டுகளாக அறுபட்டிருந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டாமே என்று கூட நினைத்தாள். ஆனால், கோபம் அப்பா மீதுதான். வீட்டில் உள்ள மற்றவர்களிடம் இல்லை என்பதால் அவர்களையாவது பார்க்க முடியும் என்ற நப்பாசை எழுந்தது.
குமார் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. மகளுக்கு இது பத்தாம் வகுப்பு. அவளைக் கூட்டிக்கொண்டு போக முடியாது. தாத்தாவின் முகத்தை பேத்தி பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இப்படி ஓர் உறவு இருப்பது அவளுக்குத் தெரியாமல் போவதே நல்லது.
குமாரை அலைபேசியில் அழைத்தாள்.
“அப்பா செத்துட்டாருன்னு தங்கச்சி போன் பண்ணா. போயிட்டு வர வா?” என்று கேட்டாள்.
“அதுக்கு எதற்கு அனுமதி? மாமாவைப் பார்க்க நானும் வர்றேனே” என்று கேட்டான் குமார்.
“அதெல்லாம் வேணாம். எனக்கே அந்தாள் அப்பனில்லன்னு சொல்றேன். மத்தவங்கள பார்க்கதான் நானே போறேன். உங்களுக்கு மட்டும் என்ன மாமா உறவு? நீங்க வர வேணாம். நான் திரும்ப வர்ற வரைக்கும் சீக்கிரமா வீட்டுக்கு வந்து பாப்பாவை பார்த்துக்கோங்க” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
நான்கு நாள் தங்குவதற்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டாள். வீட்டைப் பூட்டினாள். அப்பாவின் மேல் இருந்த கோபம் பூட்டைப் பூட்டும் போது தெரிந்தது. சாவியை மேல் வீட்டில் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
****
நான்கு மணி நேர பேருந்துப் பயணத்தில் இளமைக் கால நினைவுகள் ஒவ்வொன்றாக வந்து சென்றன. வீட்டுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்ததால் தனக்கு மகாலட்சுமி என்ற பெயர் வந்ததைத் தவிர, வேறு எந்த நன்மையும் தான் அடைந்ததாகத் தெரியவில்லை. அவள் மட்டுமல்ல, அவளுக்குப் பிறகு பிறந்த இரண்டு தங்கைகளும், கடைசியாகப் பிறந்த தம்பியும்தான்.
தம்பியும் இப்போது வளர்ந்திருப்பான். “இருபது வயசு இருக்குமா, அவனுக்கு?’ என்று கேட்டுக் கொண்டாள். அடிப்பதில் பெரியவர், சிறியவர் என்ற வித்தியாசத்தை அப்பா பார்த்ததே இல்லை. ஐந்து வயது தம்பி ராமுவுக்குக் கூட நல்ல அடி கிடைக்கும்.
பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கக்கூடாது என்பதற்கு அப்பாதான் உதாரணம். வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் அடி, உதைதான். பெண் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று யாராவது சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும். “எல்லாம் எனக்குத் தெரியும். வந்துட்டானுங்க புத்தி சொல்ல” என்பார்.
அப்பா வீட்டிற்குள் வந்துவிட்டாலே மயான அமைதி நிலவும். எப்போது அவருக்குக் கோபம் வரும் என்பது யாருக்கும் தெரியாது. கோபம் வந்தால் மாட்டியவர்களின் கதி அதோகதிதான். அடிக்கடி அம்மாதான் மாட்டிக்கொண்டாள். அந்த காலத்து பெண்மணி அவர். குழந்தைகளுக்காக எதையும் தாங்கும் மரமாகிப் போனார்,
அடுத்தபடியாக, மூத்த மகள் என்பதால், மகாவுக்குதான் அதிக அடி கிடைக்கும். அதனால், அவளுக்கு அப்பாவைப் பிடிக்காது. அம்மாவைப் போல அவள் அமைதியாகவும் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்பாவிடம் எதிர்த்துப் பேசுவாள். அடி இன்னும் பலமாக விழும்.
மற்றபடி மூன்று பெண்களையும் கடைக்குட்டி பையனையும் அப்பா நன்றாகவே படிக்க வைத்தார். படிக்க வைப்பதில் பாலின பாகுபாடு காட்டுவது அவருக்குப் பிடிக்காது. ஆனால், அதெல்லாம் ஏன் தனது மனதில் நிற்கவில்லை என்பது அவளுக்கு இன்னும் புதிர்தான்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு கொடுமையையும் அவள் சந்தித்தாள். கல்லூரிக்கு அனுப்பி விட்டு, மகளுக்குத் தெரியாமல் அப்பா பின்தொடர்வார். என்றாலும், மகாவுக்கு அது புரிந்தே இருந்தது.
“ச்சே… என்ன அப்பா இவர்’ என்று உடம்பெல்லாம் கூசும்.
படிப்பு முடிந்ததும், அப்பாவை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினாள். ஒரு விடுதியில் தங்கி அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்த போதுதான், குமாரைச் சந்தித்தான். அவளுடைய நிலைமை புரிந்தும், குமார் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டான். இருவரும் திருமணம் செய்துகொண்டு அப்பாவின் முன்னால் நின்றார்கள். ஏறிட்டுப் பார்த்து, “இந்த ஓடுகாலி இப்படி செய்யும்னு நெனச்சேன். உன்ன…” என்று சொல்லிவிட்டு கை ஓங்கினார்.
குமார்தான் தடுத்தாள். மகாவுக்கு கோபம் வந்தது.
“நீ யாருய்யா என்ன ஓடுகாலின்னு சொல்ல. நீ ஒழுங்கா வளர்த்திருந்தா, நான் ஏன் ஓட போறேன்?” என்று கேட்டு விட்டு, குமாரை இழுத்துக்கொண்டு வெளியேறினாள். அதன் பிறகு பிறந்த வீட்டின் பக்கம் மகா தலை வைத்து கூட படுக்கவில்லை. இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த செய்தி தோழிகள் மூலம் வந்ததோடு சரி.
குமாருக்கு மகாலட்சுமியைப் பற்றி புரிந்ததால் புகுந்த வீட்டில் பிரச்னை எதையும் அவள் சந்திக்கவில்லை. மகள் பிறந்ததும் பழைய வாழ்க்கை கனவு போல ஆனது. அப்படியும் சில நேரங்களில் இளம் பருவ நினைவுகள் அவளுக்குள் தலைதூக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் துடித்து போவாள்.
****

“வேலூர் வந்தாச்சு. இறங்குங்க” என்றார் கண்டக்டர். மகா இறங்கி கொண்டாள். பேருந்து நிலையத்தில் இருந்து பத்து, பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்குச் சென்றுவிடலாம். சொந்த வீடு என்பதால் வீடு மாறவில்லை. பெரிய தங்கை போன் செய்து தகவல் சொல்லும்போது, அப்பாவுடன், அம்மாவும் கடைசி தங்கையும் மாப்பிள்ளையும் உடனிருந்ததாகச் சொன்னாள். தம்பியும் அப்பாவுடன் தான் இருந்திருப்பான்.
வீட்டிற்குள் நுழைந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தது. மகாவைப் பார்த்தவுடன் சொந்தங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். தான் இருப்பது அப்பாவின் இறுதி காரியத்தில் என்ற நினைப்பு வர உடனே அமைதியாக அப்பாவின் உடல் பக்கம் நகர்ந்தாள்.
அப்பாவின் பிணத்திற்கு அருகில் அழுதழுது கலங்கிய கண்களோடு அம்மாவும், தங்கைகளும் அமர்ந்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மகளை பார்த்த அம்மா, “நம்மை விட்டு போயிட்டாருடீ…” என்று பெருங்கூச்சலிட்டு அழத் தொடங்கினாள். இரண்டு தங்கைகளும் பின்னணியில் கூச்சலிட்டார்கள். மகாவுக்கு அழுகை வரவில்லை. கல்லைப் போல அமர்ந்திருந்தாள்.
“என்ன இருந்தாலும் பெண் பிள்ளைக்கு இவ்வளவு ரோஷம் கூடாதும்மா” என்று ஒரு குரல் கூட்டத்தின் மத்தியில் எழுந்தது. மகா கோபமாகக் கண்களை சுழற்றினாள்.
ஓர் இளைஞன், “உஷ்.. உஷ்..’ என்று அதட்டினான். அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களும் கலங்கியிருந்தன. அவன் தான் ராமு என்பதை உணர்ந்து கொண்டாள்.
அரவணைப்பாக அவன் தோளைத் தொட்டாள். அக்காவின் தொடுதல் அவனுக்கு அழுகையை வரவழைத்தது.
“அக்கா…” என்று விசும்பத் தொடங்கினான். அவளுக்கு ஏனோ வெறுப்பு வந்தது. கையை எடுத்துக் கொண்டு, பார்வையை அக்கம் பக்கம் சுழல விட்டாள்.
தங்கைகளோடு இரண்டு, மூன்று குழந்தைகளும் இருந்தன. ஒரு பையன் அழகாகப் புன்னகைத்தான். மகா சூழ்நிலையை மறந்து, அவனை நோக்கி கைகளை நீட்டினாள். இரண்டாவது தங்கை அவனை தரதரவென்று இழுத்து வைத்துக்கொண்டு, மகாவை முறைத்தாள்.
“”நேரமாச்சு… தூக்கணும். வாய்க்கரிசி போட எல்லோரும் வாங்க” என்று குரல் கேட்டது. எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள். மகாவும் போட்டாள். போடும் போது, “”உனக்கெல்லாம் தண்டச் சோறு போடணும்னு என் தலையெழுத்து” என்ற அப்பாவின் குரல் ஒலித்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.
இறுதிச்சடங்கு முடியும் வரை மகாவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. ஊராரும், சொந்த பந்தங்களும் மகாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சி சேர்ந்தனர். அவள் எதையும் சட்டை செய்யவில்லை.
இரண்டு நாட்கள் கழிந்தன. மகா அம்மாவின் வீட்டில் தான் தங்கியிருந்தாள். வீட்டில் மற்றவர்களோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசினாள். மகள் இரண்டு நாட்களாக கூட இருப்பது அம்மாவுக்கு ஆறுதல் என்றாலும், அதை சொல்லக் கூடிய மனநிலையில் இல்லை.
அப்போது ஒருவர் துக்கம் விசாரிக்க வீட்டிற்குள் நுழைந்தார்.
“”ஐயா செத்த அன்னைக்கு ஊர்ல இல்லேம்மா… அவர் போனது ரொம்ப சங்கடமா இருக்கு” என்று அம்மாவிடம் ஆறுதலாகப் பேசினார்.
பிறகு அவரது கண்கள் நாலாப் பக்கமும் சுழன்றன. மகாவைப் பார்த்தது நெற்றியை சுருக்கினார். ராமு மெதுவாக, “இவங்கதான் பெரிய அக்கா” என்றான்.
“ஓ… நீதானா தாயி அது… நீ ஊர விட்டு போனதுக்கு அப்புறம்தாம் நான் உங்க அப்பாவுக்குப் பழக்கம். என் பொண்ணு பேரும் மகாலட்சுமிதான். அதனாலேயே எங்க வீட்டுக்கு ஐயா அடிக்கடி வருவாரு. அந்த மகாலட்சுமிய தான் புரிஞ்சுக்காம விரட்டிட்டேன். இந்த மகாலட்சுமி கிட்டயாவது ஆறுதல் கிடைக்குமேன்னு வர்றேன்னு சொல்லுவாரு…” என்று அவர் பேசிக் கொண்டே போனார்.
அதற்கு மேல் அவர் பேசியது எதுவும் மகாவின் காதில் விழவில்லை. மீறி வந்த அழுகையை அவளால் அடக்க முடியவில்லை.

 

(தினமணி கதிர் – 23-04-2017)

 

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s