ஜி.எஸ்.டி: உண்மை என்ன?

ஜி.எஸ்.டி. வரி விகித நிர்ணயக் கூட்டத்தில் தங்கம் மீதான வரி விகிதம் முடிவானதும், “ஜிஎஸ்டி வரியால் நாடு முழுவதும் தங்கம் விலை அதிகரிக்கும்’ என்று பிரபல ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டது.
அதே நாள், “ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் கேரளத்தில் தங்கம் விலை குறையும்’ என்று அந்த மாநிலத்தில் வெளியாகும் மலையாள மொழி நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டன. இதில் எது உண்மை?
கடந்த பல மாதங்களாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பி வந்த சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இந்தப் புதிய வரியால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட பல வரிகளுக்குப் பதிலாக, நாடு முழுவதும் சீரான வரி விகிதம் அமலாகிறது. வரி தொடர்பான நடவடிக்கைகளையும் மாநிலங்களுக்கிடையே வரிகளைப் பகிர்ந்தளிப்பதை ஒருங்கிணைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எனினும், புதிய வரியால் மாநிலங்கள் வசமிருந்த வரி வசூலிக்கும் உரிமை, மத்திய அரசு வசம் சென்றுவிடும் என்ற அச்சவுணர்வு எழுப்பப்படுகிறது. ஆனால், வரி வசூலை முறைப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கவில்லை என்கிறது மத்திய அரசு. வரி வருவாய் மாநில அரசுகளுக்கே அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், சில்லறை விற்பனையில் உள்ள அரிசி உள்ளிட்ட தானியங்கள், கோதுமை மாவு, பால், வெல்லம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை. மற்ற பொருட்களுக்கு அவற்றின் தன்மைக்கேற்ப 5% முதல் 24% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
சுமார் 81 சதவீத பொருள்கள் 18 சதவீத வரம்புக்குள் அடங்கி விடுகின்றன. மீதியுள்ள 19 சதவீத பொருள்களுக்கு மட்டுமே 18 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பதால் ஏற்படும் லாபங்களை நாம் கணக்கிலெடுத்துப் பார்த்தாலே ஜிஎஸ்டி தொடர்பான அச்சவுணர்வு குறைந்து விடும். உதாரணமாக, தேயிலையின் விலை அஸ்ஸôம் போன்ற மாநிலங்களில் குறைவு. தென்னிந்தியாவில் அதிகம். காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் – சரக்குப் போக்குவரத்து. தேயிலைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி விகிதம் வித்தியாசப்படுகிறது. தவிர, மாநில எல்லைகளில் விதிக்கப்படும் சுங்க வரிகள், மற்ற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கான வரிகள் அனைத்தும் சேர்ந்து விற்பனை வரியுடன் நுகர்வோர் தலையிலேயே விழும். விற்பனையாளர்களுக்கும் பல்வேறு இடங்களில் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவையெல்லாம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் குறையும். அதனால், பொருள்களின் மீது வீணாக சுமத்தப்படும் விலையும் குறையும். மேலும், வரி செலுத்துவதை முறைப்படுத்துவதால் கள்ளச் சந்தைகளில் விற்பதும், பொருள்களைக் கடத்துவதும் வெகுவாகக் குறையும். தொடக்கத்தில் இதனால் சில சிரமங்கள் தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் நன்மைகள் கிடைக்கும்.
வரி வருவாயில் மாநிலங்களின் பங்களிப்புக்கு ஏற்ற வகையில் வருவாயைப் பிரித்துத் தருவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வணிக வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் இடர்களைக் களைவதற்கு இந்தக் குழு ஆய்வு செய்யும்.
நாட்டின் தென் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.
தங்கத்துக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறித்த தகவலை ஒவ்வொரு ஊடகமும் அதனதன் வழியில் வெளியிட்டது போல, பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் குறித்து, பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட ஊகச் செய்திகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. அதனால்தான் அரசே விளம்பரம் வெளியிட்டு விளக்க வேண்டிய நிலை எழுந்திருக்கிறது.
எனவே குழம்பவோ குழப்பவோ அவசியமே இல்லை.
மேலும், இந்த வரி விகிதங்கள் எதுவும் நிரந்தரமல்ல. மறு ஆய்வுக்கு உள்பட்டது. ஜி.எஸ்.டி.விகிதங்களை அறிவித்த பிறகு பல்வேறு தரப்புகளில் வந்த எதிர்ப்பு, ஆலோசனைகளைப் பரிசீலிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 66 பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டது.
அகர்பத்திக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. கணினி பிரிண்டர்களுக்கு 28 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சினிமா டிக்கெட்டுக்கு வரி விகிதம் மாற்றப்பட்டது: ரூ. 100-க்கு குறைவாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி; ரூ.100-க்கு அதிகமாக உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் என முடிவெடுக்கப்பட்டது. குழந்தைகள் ஓவியம் வரையப் பயன்படுத்தும் நோட்டுகளுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.
எனவே பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்புடைய பொருள்களுக்கு வரி விதிப்பு விகிதத்தை மறு பரிசீலனை செய்யும் முறை உள்ளது என்பது தெளிவு.
இதைத் தவிர, மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் யோசனைகளையும் வரவேற்றுள்ளது. மேலும் @askgst_goi என்ற சுட்டுரைப் பக்கத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகின்றன. 1800-1200-232 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி-யைக் கண்டு அச்சப்பட்டுக் கொண்டிராமல், வரி சம்பந்தமான யோசனைகளையும் தெரிவிக்க வேண்டியது வர்த்தக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும். வரி விதிப்பில் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால், அதையும் மத்திய அரசுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் தெரிவிக்கலாம். தற்போதைய வரி விதிப்பு இறுதியானதல்ல என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல, ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வர்த்தகர்கள் தகவமைத்துக் கொள்ள முடியும். ஜி.எஸ்.டி. முறையை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மென்பொருள் துறையில் ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய புதிய நடைமுறை நாடு முழுவதும் அறிமுகமாகும்போது, சிக்கல் ஏற்படக் கூடியது சகஜம்தான். அவற்றை எதிர்கொண்டு, குறைகளை சரி செய்வதுதான் சரியான வழியாக இருக்கும்.
சில முக்கியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள்

வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள்

1. சில்லறை வணிகத்தில் விற்கப்படும் பேக் செய்யாத உணவு தானியங்கள்
2. வெல்லம்
3. பால்
4. முட்டை
5. தயிர்
6. லஸ்ஸி
7. சில்லறை வணிகத்தில் விற்கப்படும் பால் பன்னீர்
8. வணிக முத்திரையில்லாத இயற்கை தேன்
9. காய்கறிகள்
10. வணிக முத்திரையில்லாத கோதுமை மாவு
11. வணிக முத்திரையில்லாத பருப்பு
12. வணிக முத்திரையில்லாத மைதா
13. பிரசாதப் பொருள்கள்
14. உப்பு
15. கர்ப்பத் தடை மாத்திரைகள்
16. மருத்துவ சேவைகள்
17. கல்வி சேவைகள்

5% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. சர்க்கரை
2. தேநீர்
3. வறுத்த காப்பி கொட்டை
4. பால் பவுடர்
5. சமையல் எண்ணெய் வகைகள்
6. குழந்தைகளுக்கான பால் உணவுகள்
7. பாக்கெட் செய்யப்பட்ட பால் பன்னீர்
8. துடைப்பம்
9. செய்தித்தாள்கள்
10. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய்
11. சமையல் எரிவாயு
12. நிலக்கரி

12% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. நெய்
2. செல்லிடப்பேசி
3. வெண்ணெய்
4. நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகள்
5. முந்திரி
6. பாதாம்
7. பழச்சாறுகள்
8. பாக்கெட், பாட்டிலில் அடைக்காத தேங்காய் எண்ணெய்
9. குடை
10. ஊதுபத்தி

18% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. கேசத் தைலம்
2. சோப்
3. மூலதனப் பொருள்கள்
4. தொழில்துறை இடைத்தரகுகள்
5. கார்ன் ஃப்ளேக்ஸ்
6. ஜாம்
7. பாஸ்டா
8. சூப் வகைகள்
9. கழிவறைத் தாள்கள், முகம் துடைக்கும் தாள்கள்
10. இரும்பு
11. கணிப்பொறி
12. இங்க் பேனா

24% வரி விதிக்கப்படும் பொருள்கள்

1. வாசனை திரவியங்கள்
2. சிமென்ட்
3. அழகு சாதனங்கள்
4. சூயிங் கம்
5. பட்டாசுகள்
6. மோட்டார் சைக்கிள்

 

பெட்டிச் செய்தி 1

1,211 பொருள்களுக்குப் புதிய வரி விகிதம்!

ஜிஎஸ்டி தொடர்பான ஒருமித்த கருத்துகளை ஏற்படுத்துவதற்காகவும், வரி விகிதங்களை விவாதிப்பதற்காகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் சார்பில் இதுவரை 16 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஜிஎஸ்டி வரம்புக்குள் இதுவரை 1,211 பொருள்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பெட்டிச் செய்தி 2

காணாமல் போகும் வரிகள்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் கீழ்க்கண்ட வரிகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்கப்படுகின்றன:
1. மத்திய உற்பத்தி வரி (சி.இ.டி)
2. சொத்து வரி
3. வர்த்தக வரி
4. மதிப்புக் கூட்டு வரி
5. உணவு வரி
6. மத்திய விற்பனை வரி (சி.எஸ்.டி)
7. பொழுதுபோக்கு வரி
8. நுழைவு வரி
9. கொள்முதல் வரி
10. சொகுசு வரி
11. விளம்பர வரி
12. லாட்டரி வரி
13. சுங்கத் தீர்வை

 

(தினமணி வர்த்தகப் பக்கம் – 12-06-2017)

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s