வேறென்ன சொல்ல?

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய போபியா என்ற கிராமம் அது. “எல்லை வேலி பக்கம் தவறியும்கூட செல்லக் கூடாது’ என்பது ராணுவத்தின் கண்டிப்பான அறிவுறுத்தல். ஆனால், கிராமவாசியின் கன்றுக்குட்டிக்கு அதெல்லாம் தெரியுமா என்ன?

ஒருநாள் அது வேலி பக்கம் ஓட, அதைத் துரத்திக் கொண்டு கிராமவாசியும் ஓட, பாகிஸ்தான் ராணுவம் சுடத் தொடங்கியது. அதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் சுட ஐந்து நாள்களுக்கு ஓயாத துப்பாக்கிச் சண்டை.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நாள்களில் பிரச்னை ஓய்ந்த பிறகு, எல்லைப் பகுதியைப் பார்வையிடச் சென்ற சில இளைஞர்கள், “இப்படி தினம் தினம் போரிட்டு, இந்தியாவுடன் இருக்கதான் வேண்டுமா?’ என்று கேள்வியெழுப்பினார்கள். பதில் உடனடியாக வந்தது.

“எல்லையில் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தாலும், இந்தியாவில் இருப்பதால் எங்களுக்கு வாரத்துக்கு நான்கு நாள்கள் உணவாவது கிடைக்கிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்தால் அதுவும் நிச்சயமில்லை. நாங்கள் இந்தியாவையே விரும்புகிறோம்’.

நாட்டில் மற்ற பகுதிகளில் இருப்பது உணர்வுபூர்வமான தேசபக்தி என்றால், ஜம்மு – காஷ்மீர் மக்கள் யதார்த்தமாகவும் தேசபக்தியை உணர்ந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழ்நிலையை காஷ்மீர் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவுடன் இணைந்திருந்தால்தான் அமைதியாக வாழ முடியும் என்று நம்வோர் எண்ணிக்கை அண்மை காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது அந்த மாநில நிர்வாகத்திலும் எதிரொலிக்கிறது.

ஜம்மு – காஷ்மீரை ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்று பகுதிகள் இருந்தாலும், காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்புகளுக்கு வர முடியும் என்பது தான் யதார்த்த நிலையாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது.

ஜம்முவைச் சேர்ந்த ஹிந்து ஒருவர் துணை முதல்வராக வர முடிகிறது. ஆட்சி, அரசியல் பொறுப்புகளில் ஹிந்துக்களும், பெளத்தர்களும் நுழைய முடிகிறது. புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனி குடியிருப்பு, லடாக் பகுதி மக்களை மேம்படுத்துவது என்று நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளால், அந்த மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்து வருவது கண்கூடு.

இப்படி இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்கள் ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்து வந்தாலும், நம்மூர் அறிவுஜீவிகள் “காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது’ என்ற பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம், இந்தியாவை வசை பாடுவதை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கின்றனர்.

இந்தப் புலம்பல்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வலுவாக பிரசாரம் செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்திய ராணுவத்தில் இருப்பதை மறந்து விட்டு, ராணுவம் காஷ்மீர் மக்களைக் கொடுமைப்படுத்துவதாக பரப்பப்படுகிறது.

இன்னும் சிலரோ ஒரு படி மேலே சென்று, பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை அழைத்து நாட்டின் பிற மாநிலங்களில் கூட்டங்களை நடத்துகின்றனர். சில அறிவுஜீவிகள் பாகிஸ்தானுக்கே பயணித்து, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

கிலானி, பர்ஹான் வானி போன்ற பயங்கரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மதச்சாயம் பூசுகிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இத்தகைய பிரசாரங்கள் ஊறு விளைவிக்கும் என்பதை தெரிந்தே செய்கின்றனர்.

ஆனால், இந்த அறிவுஜீவிகள் ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தும் வெறியாட்டங்களையோ, அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது குறித்தோ தவறியும்கூட வாய் திறப்பதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்த நான்கு லட்சம் பண்டிட்டுகள் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருப்பது பற்றியும் பேசுவதில்லை.

அமர்நாத்துக்கும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கும் யாத்திரை மேற்கொள்ளும் அப்பாவி பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு இந்த அறிவுஜீவிகள் தவறியும் கூட கண்டனம் தெரிவிப்பதில்லை. காஷ்மீர் எல்லையில் சுட்டுக் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் அவர்களுக்கு ஒரு செய்தியாகக் கூட தென்படுவதில்லை.

காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு உண்மையிலேயே இருக்குமானால், அங்கு வளர்ச்சி ஏற்படுவதற்கு என்ன தடை இருக்கிறது என்பது பற்றி ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்ய அறிவுஜீவிகள் என்று கூறிக் கொள்வோர் தயாராக இல்லை.

அண்மையில் இஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் முசாஃபர் வானி ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டது. மத்திய – மாநில அரசுகளும், ராணுவமும் கலவரத்தை அடக்க நடவடிக்கை எடுத்தன.

அதேநேரத்தில், நம்முடைய அறிவுஜீவிகளோ, காஷ்மீர் மக்களை இந்திய அரசு துன்புறுத்துவதாக மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கினர்.

வழக்கம்போல் இந்திய விரோத செய்திகளை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு, சுதந்திரத்துக்கும் கருத்துரிமைக்கும் இங்கு இடமில்லாதது போல் எழுதினார்கள். தேசபக்திக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்து கொண்டனர்.

பர்ஹானை தியாகியாக வர்ணிப்பதில் பாகிஸ்தானுடன் இந்த அறிவுஜீவிகள் போட்டி போட்டு செயல்பட்டார்கள். இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய கருத்துக்களுக்கும் மாற்றுச் சிந்தனைகளை ஏற்கும் மனப்பான்மையோடு இடமளிக்கப்படுகிறது என்ற உண்மை, பாவம் அவர்களுக்கு புரியவில்லையே!

மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்ட வேண்டிய நேரத்தில் அவதூறுகளைப் பரப்புவது வெட்கக்கேடு, வேறென்ன சொல்ல?

(தினமணி 21-07-2016)

Advertisements
Posted in Uncategorized | Leave a comment

மாலதி அத்தை – பாலர் சிறுகதை

“அவளை அடிக்காதேன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்க மாட்டியா டா” என்று கத்திக் கொண்டே ராகவை நோக்கி அம்மா வேகமாக வந்தாள்.
“மாட்டேன்….” என்று தெனாவெட்டாக பதில் சொல்லிவிட்டு, வேகமாகப் பறந்தான் ராகவ்.
பொதுவாக, ராகவ் நல்ல பையன். படிப்பிலும், விளையாட்டிலும் திறமையானவன். அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோருக்கும் மரியாதை தருவான். ஆனால், அவர்களது வீட்டோடு இருக்கும் மாலதி அத்தையைக் கண்டால் மட்டும் அவனுக்குப் பிடிக்காது.
மாலதி அத்தை பார்ப்பதற்கு புத்தி சுவாதீனம் குறைந்தவளாகத் தெரிவாள். அதனால், அவளை வெளி நபர்கள் எல்லாம் கிண்டல் செய்வார்கள். ஆனால், மாலதியின் நல்ல குணங்களை வீட்டில் இருப்பவர்கள் தெரிந்து வைத்திருந்ததால், அவர்கள் மதித்தார்கள்.
தொடக்கத்தில், மாலதியை ராகவுக்கும் பிடிக்கும். அவளுக்கும் ராகவ் என்றால் உயிர். அவனை ஆசையுடன் கொஞ்சுவாள். ஆனால், மற்றவர்கள் மாலதியை கிண்டல் செய்வதைப் பார்த்து, ராகவும் கிண்டல் செய்துவந்தான்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாலதியை சீண்டுவது, கிள்ளுவது, அடிப்பது என்று தொந்தரவு கொடுத்தான். அவள் வலி தாங்காமல் அலறுவாள். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள், ராகவ் சிட்டாகப் பறந்துவிடுவான்.
இந்த விஷயத்தில் பெரியவர்களின் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. இதனால், கோபப்பட்டு திட்டினாலோ, அடித்தாலோ அந்தக் கோபத்தையும் மாலதியிடமே காட்டுவான்.
ஒருமுறை வீட்டில் பெரியவர்கள் அனைவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார்கள். ராகவுக்கு தேர்வு நேரம் என்பதால், அவனையும், மாலதி அத்தையையும் மட்டும் வீட்டில் விட்டு சென்றார்கள்.
“மாலதி அத்தையையும் கூட்டிட்டு போங்க” என்று ராகவ் சொல்லிப் பார்த்தான். ஆனால், உறவினர் வீட்டின் நிலைமை கருதி மாலதியை அழைத்துப் போகவில்லை. எனவே, ராகவும், அவனது அத்தையும் வீட்டில் இருந்தார்கள்.
இந்த நேரத்தில், வீட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்ததை கவனித்த இரண்டு திருடர்கள், வீட்டைக் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டினார்கள். இரவு நேரத்தில் தெருவில் இருந்த வீடுகளின் விளக்குகள் அணைந்த பிறகு, ராகவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
சத்தம் கேட்டு ராகவ் எழுவதற்குள், அவனை இரண்டு திருடர்களும் நன்றாக அடித்து கட்டிப் போட்டார்கள். அவர்கள் அடித்த அடியில், ராகவ் மயங்கிவிட்டான். திருடர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.
இதற்குள், சத்தம் கேட்டு மாலதி விழித்துவிட்டாள். வீட்டிற்குள் திருடர்கள் இருந்தது அவளுக்குத் தெரிந்தது. “யாராவது திருடன் வந்தால், மிளகாய் பொடியை எடுத்துக்கோ” என்று என்றைக்கோ பாட்டி கற்றுக் கொடுத்திருந்தாள். அதை மாலதி சரியான நேரத்தில் உபயோகித்தாள்.
இருட்டிலேயே சமையல் அறைக்குச் சென்று மிளகாய் பொடியை எடுத்தாள். மாலதி வருவதைப் பார்த்து திருடர்கள் சுதாரிப்பதற்குள் , அவர்கள் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டாள். அதனால், திருடர்கள் அலறித் துடித்தனர். அதற்குள், மாலதி, “ராகவ்…” என்றும், “திருடன்” என்று கத்தி அழத் தொடங்கினாள்.
இரவு நேரத்தில் மாலதி பெருங்குரல் எடுத்து கத்தத் தொடங்கியதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராகவின் வீட்டுக்கு வந்தனர். அங்கு ராகவ் கட்டப்பட்டு, மயக்கநிலையில் இருந்ததையும், திருடர்கள் கண்களைக் கசக்கி அலறித் துடிப்பதையும் கவனித்தனர். பக்கத்து வீட்டினர் வேகமாக செயல்பட்டு திருடர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ராகவ் கண் விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் படுத்திருந்தான். அங்கிருந்த செவிலியருக்கு தன்னை காப்பாற்றியதற்காக நன்றி கூறினான். அதற்கு அவர், “உங்க அத்தைதான் உன்னையும், உன் வீட்டையும் காப்பாத்தினாங்க. பரவாயில்லையே…. பார்க்க ஒருமாதிரி இருந்தாலும், தைரியமாக இருக்காங்களே?…” என்று மாலதி அத்தையைப் புகழ்ந்து தள்ளினார்.
ராகவ் தன்னுடைய தவறுகளை உணர்ந்தான். மாலதி அத்தையைக் கூப்பிட்டு, “என்னை மன்னிச்சுருங்க அத்தை… என்னை காப்பாத்தினதுக்கு நன்றி” என்றான். அவளோ, எதுவும் புரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, “ராகவ் கண்ணு…” என்று கூறியபடி, அவனது தலையைத் தடவி கொடுத்தாள்.
இனி யாரையும் உருவத்தை வைத்து எடை போடக் கூடாது என்று ராகவ் முடிவு செய்து கொண்டான்.

 

(சிறுவர்மணி 09-07-2016)

Posted in Uncategorized | Leave a comment

நூலரங்கு -உணவு சரித்திரம்

Picture_192__70843_zoom

நூலாசிரியர்: முகில், 304 பக்கங்கள், விலை: ரூ.230, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டஸ் சாலை, தியாகராய நகர், சென்னை – 17. தொலைபேசி: 24322771.
உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு உணவுப் பொருளுக்கு அடிமையானவர்கள்தான். அனைத்து உணவுப் பொருள்களுக்கும் நன்மையும், தீமையும் கலந்திருப்பதைப் போல் தனித்த வரலாறுகளும் இருக்கின்றன.
மனிதன் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கிறானோ, இல்லையோ, உலகில் எங்கோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் தொலைதூரங்களுக்குக் கூட உலகம் முழுவதும் பரவி விடுகின்றன. ஒரே பதார்த்தம், ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி வடிவங்களைப் பெற்று அந்த மக்களின் வாழ்வியலோடு கலந்து விடுவதுதான் அதிசயம்.
இந்தியாவைப் பொருத்தவரை கற்காலம் தொட்டு, இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் வரை உணவுப் பொருள்கள் வகை வகையாக குவிந்த வண்ணம் உள்ளன. முகலாயர் ஆட்சியும், காலனியாதிக்கங்களும் புதுப்புது உணவுப் பழக்கங்களை நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுதான் அந்த ஆட்சிகளின் நன்மைகளில் முதன்மையானது என்பதை இந்த நூலைப் படித்ததும் உணர முடிகிறது.
உப்பு தொடங்கி வெற்றிலைப் பாக்கு வரை நம்மவர்களின் உணவில் இடம்பெற்றுள்ள பதார்த்தங்கள் ஏராளம். அவற்றை 15 தலைப்புகளில் அறுசுவை குன்றாமல் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
ஒரு உணவுப் பொருளைச் சுற்றி பிணைக்கப்படும் வரலாறுகள், கதைகள், இலக்கியங்கள், பதார்த்தங்கள் என்று சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் வயிறு புடைக்கும் வண்ணம் பரிமாறியிருக்கிறார். நாம்தான் கொஞ்சம் பார்த்து அருந்த வேண்டும்.

 

(தினமணி – 04-07-2016)

Posted in Uncategorized | Leave a comment

சட்டத் தமிழ் மேம்படுமா?

தமிழக அரசியலில் அடிக்கடி எழுப்பப்படும் சில கோரிக்கைகளில் முக்கியமானது, “உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி’ என்ற கோரிக்கை. எனினும், தமிழ் வழக்காடு மொழியானால் தலைமை நீதிபதி உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் நீதிபதிகளின் நியமனங்கள் பாதிக்கப்படும் என்பதால், இந்தக் கோரிக்கை அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

 ஆனால், சட்டத் துறையில் தமிழின் அவசியத்தை உணர்த்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. நீதிமன்றங்களை நாடி சாமானிய மக்களும் படையெடுத்து வருவதால், சட்டத் துறை சார்ந்த சொற்களை தமிழில் மொழிபெயர்த்து ஏராளமான புத்தகங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
புதிய சட்டங்கள், அரசமைப்புச் சட்டம் உள்பட அத்தியாவசிய சட்டங்கள் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் தரமான புத்தகங்களாக இருக்கிறதா, சாமானிய மக்களைச் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறிதான்.
மக்களுக்கு தமிழில் சட்டங்களை அளிப்பதற்காக, தமிழக அரசும் பணியாற்றி வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உள்பட பல்வேறு சட்டப் புத்தகங்களை தமிழக அரசு பல்வேறு தருணங்களில் வெளியிட்டுள்ளது.
சட்டத் துறையிலும், தமிழிலும் புலமை பெற்ற நபர்களால் இத்தகைய புத்தகங்கள் தயாரிக்கப்படுவதால், தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதற்காக, மாநில அரசுகளின் கீழ் சட்ட ஆட்சி மொழிப் பிரிவு என்ற தனி அலுவலகம் இயங்கி வருகிறது. கர்நாடகம், கோவா உள்பட சில மாநிலங்களில் இந்த அலுவலகம் தனி இயக்குநரகமாகவும், பெரும்பாலான மாநிலங்களில் சட்டத்துறையில் ஒரு பிரிவாகவும் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் அமல்படுத்தி வரும் சட்டங்களையும், மாநில சட்டங்களையும் ஆண்டுதோறும் மாநில மொழிகளில் வெளியிடுவது, இந்தப் பிரிவின் பணியாகும். சட்டப் புத்தகங்களை வெளியிட மத்திய அரசும் கணிசமான நிதியுதவி அளிக்கும்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்தப் பிரிவு, கடந்த 1965-ஆம் ஆண்டில் சட்ட ஆட்சி மொழி ஆணையமாக உருவானது. நீதிபதியோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியோ ஆணையத்தின் தலைவராக இருப்பார்.
அவரது தலைமையின் கீழ், தமிழ் வளர்ச்சித் துறை, சட்டத் துறை ஆகியவற்றின் செயலர்களும், தமிழிலும், சட்டத் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற முக்கியப் பிரமுகர்களும் உறுப்பினர்களாகப் பதவி வகித்துள்ளார்கள். நீதிபதி மகாராஜன் போன்றவர்கள் தலைவர்களாக அலங்கரித்துள்ளார்கள்.
சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களும், தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இந்த ஆணையத்தில் ஊழியர்களாகப் பணியாற்ற முடியும்.
சட்ட ஆட்சி மொழி ஆணையம் பல ஆண்டுகள் இயங்கியது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, இந்த ஆணையத்தின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். அரசமைப்புச் சட்டத்தையும், அத்தியாவசிய சட்டங்களையும் சாமானிய மக்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க வைத்தார்.
ஏராளமான சட்டங்கள் நூல்களாக வெளிவந்தது இந்தக் காலகட்டத்தில்தான். ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, இந்த ஆணையம் மாநில சட்டத் துறையின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டுவிட்டது. தற்போது, அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்தப் பிரிவு இயங்கி வருகிறது.
சட்டத் துறைக்குள் இந்தப் பிரிவு சுருங்கிவிட்ட பிறகு, 100-க்கும் மேற்பட்ட சட்டங்கள் இரண்டு முறை வெளியிடப்பட்டுள்ளன. பின்னர், அரசமைப்புச் சட்டம் மீண்டும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது.
இன்றைய காலத்தில் கல்வி அறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டாலும், மக்களிடையே சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், சட்ட ஆட்சி மொழி பிரிவின் மூலம், இந்திய குற்றவியல் சட்டம் உள்பட அடிப்படை சட்டங்கள் தொடர்பான புத்தகங்களை வெளியிடுவது அவசியமாகும்.
அதேபோல், ஏராளமான சட்டங்கள் தற்போது திருத்தப்படுகின்றன. அவற்றை எளிய தமிழில் உடனடியாக நூல்களாக வெளிக்கொண்டு வர வேண்டும்.
சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் பரவலாக்க வேண்டும். தற்போதைய நவீன உலகில், அரசு சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் சட்டங்களை, மத்திய சட்டத் துறை ஆண்டுதோறும் வலைதளத்தில் பதிவேற்றி வருகிறது. அதனால், பல்வேறு தரப்பினர் பயனடைந்து வருகின்றனர்.
மத்திய அரசைப் பின்பற்றி, தமிழில் மொழிபெயர்க்கப்படும் சட்டங்களையும் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதனால், சட்டங்கள் சாமானியரையும் எளிதில் சென்றடைய முடியும்.
முந்தைய காலத்தில் ஆணையமாக செயல்பட்டு, தற்போது ஏனோ ஒரு பிரிவாகச் சுருங்கிவிட்டது. இதை மீண்டும் ஆணையமாக்கினால், சாமானிய மக்களைச் சென்றடையும் நோக்கத்தின் தரம் மேம்படும். திறமை வாய்ந்த நிபுணர்களின் துணையுடன், தமிழில் ஏராளமான சட்டப் புத்தகங்களைக் கொண்டுவர முடியும்.
தமிழார்வமும், சட்ட நிபுணத்துவமும் கொண்ட இளைஞர்களுக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தாய் மொழியில் சட்டங்களைப் புரிந்து கொண்டால், மக்களுக்கும் பயனுள்ளதாக மாறும்.
தமிழின் பெருமைகள் குறித்து பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது.
இதற்காக, மாநில அரசின் கீழ் இயங்கும் சட்ட ஆட்சி மொழிப் பிரிவை அரசு நிர்வாகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(தினமணி 02-03-2016)

Posted in Uncategorized | Leave a comment

ஆழ்மனதை வெற்றிக்குப் பயன்படுத்துவது எப்படி?

ஆழ்மனம் என்பது நம்முடைய உள்ளுணர்வு சம்பந்தப்பட்டதாகும். நமது ஆழ்மனமானது, வாழ்வில் அனைத்து அம்சங்களோடும் தொடர்புடையதாகும்.

ஆழ்மனம் என்றால் என்ன?
நமது சுவாசம், உணவு ஜீரண சக்தி, இதயத் துடிப்பு ஆகியவை எப்படி தன்னிச்சையாக இயங்குமோ, அதுபோல் ஆழ்மனமும் தன்னிச்சையாக இயங்குகிறது. நம்முடைய குணநலன்கள், சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல், சிந்திக்கும் முறை ஆகியவை இயங்குவதற்கு வெளிமனதைப் போன்றே ஆழ்மனதும் உதவுகிறது. நம் உடலுடன் இணைந்தே ஆழ்மனமும் இயங்குகிறது. நமது பழக்கங்கள், நம்பிக்கைகள், சுய பிம்பம் ஆகியவை உருவாக ஆழ்மனம் துணை புரிகிறது.
ஆழ்மனத்தின் பணிகள் என்ன?
உங்களைப் பற்றி உங்கள் ஆழ்மனத்தில் எத்தகைய பிம்பம் இருக்கிறதோ, இதுதான் புற உலகில் உங்களின் பிம்பமாக வெளிப்படும். உங்களைப் பற்றி நீங்கள் உயர்வான பிம்பம் வைத்திருந்தால், அது புற உலகிலும் எதிரொலிக்கும். ஆழ்மனத்தைப் பொறுத்தே உங்களின் பலமும், பலவீனமும் தீர்மானிக்கப்படும். உங்கள் குணநலனும் அமையும்.
அன்றாட வாழ்வில் ஆழ்மனதின் பாதிப்பு
ஆழ்மனதின் பாதிப்பு, நமது அன்றாட வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, காலையில் பல் விளக்குவது, அறையை விட்டு வெளியேறும்போது விளக்கை அணைப்பது, அன்றைய தினத்தில் எந்த வண்ணத்தில் ஆடை அணிய வேண்டும் எனத் தேர்ந்தெடுப்பது ஆகிய அன்றாட நடவடிக்கைகளிலும் கூட ஆழ்மனதின் பாதிப்பு இருக்கிறது.
அதேபோல், நமது நட்பு வட்டாரம், பணிச்சூழல், நிதி நிலைமை, வருவாய் போன்ற அன்றாட நடவடிக்கைகள் ஆழ்மனதால் பாதிக்கப்படுகின்றன. நாம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு, ஆழ்மனமே துணைபுரிகிறது.
முடிவுகளில் தோல்வி ஏன்?
சிலர் அதிகமான வருமானம் வேண்டும் என்றோ, எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்பி சில செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், அனைத்து நேரங்களிலும் வெற்றி கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் உங்களது நடவடிக்கைகள் மீது உங்கள் ஆழ்மனதுக்கே நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான்.
உதாரணமாக, “நீங்கள் பருமனாக இருப்பீர்கள்’ என்று உங்கள் ஆழ்மனதில் பிம்பம் இருக்குமானால், எடையைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளும் வீணாகிவிடும். நிதி நிர்வாகத்தில் உங்களுக்கு திறமையில்லை என்று உங்களுடைய ஆழ்மனதில் பதிந்திருந்தால், வருமானம் ஈட்டுவதில் முழு ஈடுபாடு காட்டாமல் பின்தங்கிவிடுவீர்கள்.
வெற்றி பெறுவதற்கு, நீங்கள் சிந்திக்கும் முறையும், ஆழ்மனதின் நடவடிக்கைளும்தான் துணை புரியும்.
ஆழ்மனதை மாற்றியமைக்க முடியுமா?
“முடியும்’ என்கின்றனர் நிபுணர்கள்.
ஆனால், அது எளிய வழியில் கிடைத்துவிடாது. ஆழ்மனம் என்பது நமது பேச்சைக் கேட்கும் நல்ல வேலையாள்தான். அதே நேரத்தில், மோசமான எஜமானனும் கூட. அதற்கு பயிற்சியளிப்பதன் மூலமே நமது எண்ணங்கள் மாற்றியமைக்க முடியும்.
உதாரணமாக, கார் ஓட்ட கற்றுக் கொள்வதைக் குறிப்பிடலாம். கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொள்ளும்போது, கண்களை ஸ்டியரிங் மீது குவித்திருப்போம். சிறிது கூட கண் சிமிட்டாமல், சாலையின் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம். ஆனால், கார் ஓட்ட கற்றுக் கொண்ட பிறகு, சக மனிதர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டும், செல்லிடப்பேசிகளை பயன்படுத்தியபடியும் இயல்பாக கார் ஓட்டுவோம்.
ஆழ்மனதின் செயல்பாடுகளும் அப்படியே. வெற்றி பெற்ற, உறுதியான முடிவுகளைச் செயல்படுத்திய நபர்களை நம் கண் முன் கொண்டு வருவோம்.
நம்முடைய சுய பிம்பம், குணநலன்கள், ஆளுமைப் பண்புகள் ஆகியவற்றை, உறுதியான வெற்றி கிடைக்கும் விதத்தில் மேம்படுத்துவோம்.
நம்முடைய எண்ணங்களில் எதிர்மறைக் கருத்துகள் இருந்தால், அவற்றை சரி செய்ய ஆழ்மனத்துடன் போராடுவோம்.
ஆழ்மனத்தை மாற்றியமைப்பதற்கான வழிகள்:
ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துதல், அது பற்றிய பிம்பத்தை உருவகித்துக் கொள்ளுதல், அதற்கு ஏற்ற வகையில் மனதின் ஆற்றலைப் பெருக்குதல், மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையோடு பயிற்சி பெறுதல் போன்ற வழிகளின் மூலம், ஆழ்மனதின் ஓட்டத்தை மாற்ற முடியும்.

(இளைஞர்மணி 24-06-2016)

Posted in Uncategorized | Leave a comment

குற்றவாளி – சிறுகதை

இரவு ரோந்தை முடித்துவிட்டு, காலை நேரத்தில் ஆயாசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான் கான்ஸ்டபிள் கோவிந்தன். காலணிகளையும், உறையையும் கழற்றி வீசிவிட்டு, ஹாலில் இருந்த நாற்காலியில் பொத்தென்று விழுந்தான்.

கார்த்திக்கை காணவில்லை. பள்ளிக்கூடத்துக்கு போயிருப்பான்.

அவன் அமர்ந்த சத்தம், சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த ஷாலினிக்கு கேட்டிருக்க வேண்டும். அடுத்த நொடி, வார்த்தைகள் வேகமாக விழுந்தன.

“”எத்தனை தடவை உங்க கிட்ட சொல்லியிருக்கேன். லஞ்சம் வாங்காதீங்க. வாங்கினாலும் வீட்டுக்கு கொண்டு வராதீங்கன்னு. அந்தப் பணத்துல கார்த்திக்கு ஏன் கிரிக்கெட் மட்டை எல்லாம் வாங்கி தர்றீங்க?” என்று சத்தம் போடத் தொடங்கினாள்.

கோவிந்தனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “என்ன மனைவி இவள்? வீட்டுக்கு வந்ததும், வாய்க்கு காபி ஏதாவது தர்றாளா. சண்டையை ஆரம்பிக்கிறாளே’

அவனும் பதிலுக்குக் கத்தினான். “‘ஏய்.. சும்மா வந்ததும் கத்தாதே… என்னதான் என்னைப் பார்த்து ஊரே பயந்தாலும், வாங்கற சம்பளம் எட்டாயிரத்தி சொச்சம்தான். அதோட நீ டீச்சர் வேலைக்கு போய் வாங்குற சம்பளத்தை சேர்த்தாலும் பதினையாயிரத்த தாண்டாது. லஞ்சம் வாங்காம எப்படி வாழறதாம்?” என்றான்.

“”கத்தாதய்யா… தப்பு செய்யறதையும் செஞ்சிட்டு பேச்ச பாரு. ஒழுங்கா அந்த லஞ்சப் பணத்த கோயில் உண்டியல்ல போய் போட்டுடு”

“”என்னடி வாய் நீளுது. போலீஸ்காரன்னா அப்படி இப்படிதான் இருப்பான். அத தெரிஞ்சிதானே காதலிச்சு கலியாணம் பண்ணே?”

“”ஆனா நான் போலீஸ்காரனைதான் காதலிச்சு கலியாணம் பண்ணேன். திருடனை இல்ல” என்றாள் ஷாலினி வெடுக்கென்று.

“”அடிங்…” கோவிந்தன் கையை வேகமாக ஓங்கினான்.

“”இந்த வேலையெல்லாம் வீட்டுக்கு வெளிய வச்சுக்கோ… எங்கிட்ட வச்சிக்கிட்ட….” என்று ஷாலினி பதிலுக்கு எகிறினாள்.

கோவிந்தன் தலையை கவிழ்ந்தான். அவன் நினைத்தால் ஷாலினியை அடிக்க முடியும்தான். ஆனால், அடிக்க மனம் வரவில்லை.

கோபத்தோடு படுக்கைக்குச் சென்று பொத்தென்று விழுந்தான். அவன் கோபத்துக்கு படுக்கை கூட பயந்து அலறியது.

படுத்ததும் தூக்கம் வரவில்லை. வழக்கு, கொலை குற்றவாளி, காவல் நிலையம் எல்லாம் அவனது நினைவுகளில் மாறி, மாறி வந்து போயின.

“வீட்டுக்கு வந்தாவது குடும்பத்தைப் பத்தி யோசிக்கறோமா?’ என்று ஷாலினி, கார்த்திக் முகங்கள் நினைவுக்கு வந்தது. மற்ற காவலர்கள் அவரவர் வீடுகளில் வேலைகளைப் பார்ப்பதை அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு.

தான் அதுபோல் செய்வதில்லை என்ற உணர்ச்சி நெஞ்சைக் குத்தும்போது கோவிந்தனுக்கே வெட்கமாக இருந்தது.

ஆனால், அடுத்த கணம் சிறிது நேரத்துக்கு முன்னால் ஷாலினியோடு நடந்த சண்டை நினைவுக்கு வந்தது.

கோபத்துடன் காலை ஓங்கி படுக்கையில் மீண்டும் வைத்தான். கோபத்தை தூக்கம் தோற்கடித்து, கண்களைத் தழுவிக் கொண்டது.
****

காவல் நிலையம் வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் இருந்தது. முக்கியக் ரவுடிகள் பட்டியலில் இருந்த ஆத்மா என்ற ஆத்மநாதனைப் பிடித்துவிட்டார்கள். ஆய்வாளர் பத்திரிகைகாரர்களிடம் உற்சாகமாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

“ம்ம்ம்…. என்னதான் எல்லோரும் சேர்ந்து குற்றவாளிகளைப் பிடித்தாலும், கடைசியில ஆய்வாளர்கள் மட்டும் பேரும், அவார்டும் வாங்கிட்டு போயிடறாங்க. கான்ஸ்டபிள் மட்டும் கடைசி வரை ஒரே ஸ்டேஷன்ல இருந்து அல்லல்பட வேண்டியிருக்கு’ என்று கோவிந்தன் மனதுக்குள் பொருமினான்.

காவலர்கள் ஆத்மாவை அறைக்குள் கைகளைக் கட்டி வைத்து, விசாரிக்க ஆயுத்தமாக இருந்தார்கள்.

ஆய்வாளர் வந்தார். ஆத்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். காவல்துறையின் அடிகளைத் தாங்குவதற்காக அவன் உடலைத் தயார் செய்து கொண்டது போல் இருந்தது.

ஆய்வாளர் விசாரணையைத் தொடங்கினார். “”உன் மேல நாலு கொலை வழக்கு, ரெண்டு பலாத்கார வழக்கு, இருபது வெத்துக்குத்து வழக்கு இருக்கு. உனக்கு மேல யாராவது இருக்காங்களா. சொல்லுடா…” என்று அவனை மிதித்தார்.

ஆத்மா எதுவும் சொல்லவில்லை. ஆய்வாளர் மிதிப்பதை அதிகரித்தார். அவ்வப்போது, அவனை எட்டி உதைக்கவும் செய்தார்.

ஆத்மா வாயைத் திறந்தான். “”யாரும் இல்ல. எனக்கு நான்தான் தலைவன்”.
ஆய்வாளர் நம்புவதாகத் தெரியவில்லை.

“”டேய்…” என்று ஆய்வாளர் காலை ஓங்கி அடித்தார். அவன் அமர்ந்திருந்த நாற்காலி பறந்து போய் விழுந்தது. அவன் கீழே விழுந்தான். முகம் முழுக்க காயம்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் காவல்துறை விசாரணைகளை பலமுறை பார்த்தவன்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் கலக்கம் வரவே செய்தது. “பாவம்! யார் பெற்ற பையனோ’ என்று நினைத்துக் கொண்டான்.

ஆத்மாவின் முகத்தைப் பார்த்தான். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் முகம் இருந்தது. நல்ல வெள்ளையான, களையான முகம்.

“”தண்ணி… தண்ணி…” என்று ஆத்மா கத்தினான்.

“”டேய் தண்ணி குடுங்கடா… அவன் செத்து போயிட போறான்” என்று ஆய்வாளர் கிண்டலாகச் சொன்னார்,

கோவிந்தன் மனதில் கோபம் வந்தது.

“”என் தப்புக்கு நான் மட்டுமே காரணம்” என்ற வார்த்தையை மட்டும் ஆத்மா அடிக்கடி கூறிக் கொண்டிருந்தான்.
****

ஆத்மா மீதான வழக்குகள் அத்தனையும் வலுவாகவே இருந்தன. ஒன்றில் இருந்து கூட அவன் தப்ப முடியாது.

நீதிபதி அவனை கூர்ந்து கவனித்தார். உடல் முழுவதும் காயங்கள். ஒல்லியான அவனது உடல் இனிமேலும் அடிகளைத் தாங்காது என்றே தோன்றியது.

ஆனால், அவன் ஒரு வார்த்தை கூட வாக்குமூலம் தரவில்லை. அது இல்லாமல் வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாது.

ஆத்மா எதையோ மனதில் வைத்துக் கொண்டு சொல்லாமல் இருக்கிறான் என்பது புரிந்தது.

“”ஆத்மாவை மனநல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்று சொல்லிவிட்டு, பேனாவை எடுத்து தாளில் கிறுக்கினார்.
*****

ஆத்மாவை நினைக்கும்போது மனநல மருத்துவருக்கு “பாவம்’ என்றே தோன்றியது.
நோஞ்சானை விட மோசமாக இருந்தது அவனது தேகம். அவன் செய்த கொடூரங்களை கேள்விபட்டபோது அவரால் நம்பவே முடியவில்லை.

அவனால் எதையுமே சொல்ல முடியவில்லை. மனநல மருத்துவர் அவனை அதட்டிக் கேட்டதில், அவனது சுய விவரங்கள் மட்டுமே கிடைத்தன.

நாற்காலியில் அமர்ந்து அமைதியாக போசித்தார். ஆத்மா சில வார்த்தைகளைச் சொன்னாலும், அவன் மீதான வழக்கின் போக்குக்கு எதுவும் உதவப் போவதில்லை என்று அவருக்குப் புரிந்தது.

எத்தனையோ நோயாளிகளைப் பார்த்திருக்கிறார் அவர். காவல்துறையும் அவ்வப்போது வழக்குகளைக் கொடுத்தது. யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாதவர்கள் கூட அவரிடம் விழுந்து விடுவார்கள். ஆனால், ஆத்மாவின் வழக்கு அப்படிப்பட்டது அல்ல.

மருத்துவர், யாரோ அவசரமாகக் கூப்பிட்டது போல் திடீரென எழுந்தார். அவரது மேஜைக்கு முன்பு பதட்டமாக அமர்ந்திருந்த ஆய்வாளரும் எழுந்தார்.

“”ஜீப்பை ஆத்மாவின் கிராமத்துக்கு ஓட்டுங்க” என்று உத்தரவு பறந்தது.
****

நரசிம்மபுரம் என்ற அந்த கிராமம் பரபரப்பாக இருந்தது. கிராம மக்கள் பெருமாள் கோயிலுக்கு முன்பு உள்ள அக்கிரகாரத்தில் சேர்ந்துவிட்டனர். கோயில் பட்டர் எல்லோருக்கும் முன்னால் தலையைக் குனிந்தபடி, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் சில பெண்களும் கதறியபடி இருந்தனர். அவர்கள் ஆத்மாவின் அம்மாவாகவும், சகோதரிகளாகவும் இருக்க வேண்டும் என்று கோவிந்தன் ஊகித்துக் கொண்டான்.

பட்டரின் அழுகைக்கு அவரது மகன் ஆத்மாதான் காரணம் என்று சுற்றியிருந்த ஊர் மக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தக் கிராமத்தில் பேருக்கு ஒரு காவல் நிலையம் இருந்தாலும், ஊர் மக்களுக்கும் அதற்கும் பெரும்பாலும் சம்பந்தம் இல்லாதது போல் இருந்தது. காவல் நிலையத்துக்குள் அடியெடுத்து வைப்பதே குற்றம் என்பது பெரும்பாலானோரின் கருத்து.

அப்படிப்பட்ட கிராமத்தில், அதுவும் எல்லோருக்கும் நல்லவரான பட்டரின் மகனே பெரிய குற்றவாளி என்ற அதிர்ச்சியில் இருந்து மக்களால் விலக முடியவில்லை என்பதை அவர்களது கண்களே காட்டிக் கொடுத்தன.

“”சண்டாளா! ஊருல ஏதோ வேலைக்கு போறேன்னு சொன்னியே? இதுதானா… த்தூ…” என்று ஒரு பாட்டியம்மா ஆத்மாவின் முகத்தில் காறி துப்பினார். அவரையும், ஊர் மக்களையும் பார்க்க முடியாமல், அவன் தலையை கவிழ்த்துக் கொண்டான்.

மருத்துவர் அடிக்கடி கூட்டத்தில் கலந்து சில பேரிடம் பேச்சு கொடுத்தார். எதையோ கண்டெடுத்தது போல் வெற்றிக் களிப்புடன் ஆய்வாளரை நோக்கி வந்தார். பார்வையை சுழல விட்டார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஆய்வாளருக்குப் புரிந்தது. கோவிந்தனைப் பார்த்தார்.

மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல், “”ஏ… யாரும் இங்க நிக்கக் கூடாது. கலைஞ்சு போங்க” என்றபடி, தடியை சுழற்றினான். அடுத்த இரண்டொரு நிமிடங்களில் கூட்டம் ஒட்டுமொத்தமாகக் கலைந்தது.

மருத்துவர் இப்போது பேசத் தொடங்கினார். “”பெருமாள் கோயில் பட்டர் என்னவோ நல்லவருதான். ஆனால், அவரைச் சுற்றியிருக்கற ஊர் மக்கள்? கோயிலச் சுத்தி எல்லா தப்பும் நடக்கும். பட்டர் செய்ய மாட்டாரே தவிர, எல்லாத்தையும் கவனிப்பார்”.

“”ஊர் பேச்சுக்கு பயந்து மத்தவங்க முன்னாடி நல்லவரு வேஷம் போட்டாலும், வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் பேசுவாராம். சமயத்துல குழந்தைங்க கிட்டயும் சொல்லி பயமுறுத்துவாராம். அதெல்லாம் சேர்த்துதான் ஆத்மா என்ற ஆத்மநாதனை கொலைக்காரனா, பெரிய குற்றவாளியா உருவாக்கியிருக்கு. இத மனோதத்துவ ரீதியில எப்படி சொல்றதுன்னா…” என்று மருத்துவர் தனது ஆராய்ச்சியை விளக்கிக் கொண்டே போனார்.

கான்ஸ்டபிள் கோவிந்தனுக்கு அதற்கு மேல் எதுவும் காதில் விழவில்லை. அவன் கண்களில் ஷாலினியும், கார்த்திக்கும் வந்து போனார்கள்.
***

 

 

Posted in Uncategorized | Leave a comment

இதுவும் கடந்து போகும்…!

இது தேர்தல் நேரம். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ஒருவரை நோக்கி ஒருவர் புகார்களை எழுப்புதல், தனிப்பட்ட வாழ்க்கை உள்பட அனைத்து விஷயங்களையும் விமர்சித்தல் என அக்னி வெயிலையும் தாண்டி பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
மதம், இனம், ஜாதி உள்ளிட்ட பிரிவினைவாதப் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலவசப் பொருள்களை அறிவிக்காத அரசியல் கட்சிகள் தேர்தல் களத்துக்கே தகுதியில்லாதவை என்று நம்பப்படுகிறது.
இவற்றுக்கு மத்தியில், “இந்த முறையாவது ஒரு மாற்றம் கிடைக்குமா?’ என்ற ஏக்கமும் தேர்தல் களத்தில் எதிரொலிக்காமல் இல்லை. ஆனால், ஆட்சி நிர்வாகத்தைத் தேர்வு செய்வதற்காகவே இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்திருக்கிறோமா? நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று அலசுகிறோமா? என்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேட வேண்டியுள்ளது.
பொதுவாக, இலவசம் உள்ளிட்ட குறுகிய கால அறிவிப்புகளையும், உள்ளூர் பிரச்னைகளையும் முன்வைத்தே அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், எதிரணியினரைத் தாக்குவதற்கும் புகார்களை எழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஆட்சியில் இருக்கும் கட்சிகள் கூட வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து தேர்தலைச் சந்திக்கத் தயங்குகின்றன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசத் திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்படும் என்று மேடைதோறும் முழங்கும் கட்சித் தலைவர்கள், மக்கள் தன்னிறைவு அடைவதற்கு தங்களுடைய திட்டங்கள் என்ன? என்பது குறித்து பேசுவதில்லை.
கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் சில நேரங்களில் தொலைநோக்குப் பார்வை கொண்டது போல் காணப்பட்டாலும், நடைமுறையில் அவற்றைப் பற்றி பிரசாரம் செய்வதில்லை. இது சுதந்திர இந்தியாவில் காணப்படும் பெரும் தவறாகவே தோன்றுகிறது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் கூட ஆட்சி நிர்வாகம் என்றால் என்ன? தன்னிறைவு பெறும் வழி எது என்பது போன்ற புரிதல்கள்கூட சாமானிய மக்களைச் சென்று சேரவில்லை என்றால், நம்மால் முழுமையான வளர்ச்சியை எப்படி எட்ட முடியும்?
பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களை தன்னிறைவு அடைய வைத்தல், தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களே ஆட்சி நிர்வாகம் என்று அழைக்கப்படுகிறது. பொருளாதாரமும், பாதுகாப்பும் அரசின் நிர்வாகத்துக்கு முக்கியமானவை. அவற்றை நிர்வகிப்பதில், மத்திய அரசோடு, மாநில அரசுகளுக்கும் பங்குண்டு என்பதே இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது, இறக்குமதிகளைக் குறைத்து உற்பத்திகளைப் பெருக்குவது ஆகியவை தொடர்பான திட்டங்களை வகுப்பது மத்திய அரசின் பொறுப்பு என்றால், அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடையச் செய்வது, மாநில அரசுகளின் கடமையாகும்.
வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் செய்யப்படுகின்றனவா, மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய, அவசர காலத் திட்டங்களுக்குத் தேவையான அளவில் நிதி ஒதுக்க முடிகிறதா என்பது குறித்து மாநில அரசுகள் பரிசீலிப்பது அவசியமாகும். நிதி பற்றாக்குறை நிலவும்போது அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளால் உடனடியாக மேற்கொள்ள முடியும்.
பாதுகாப்பும் ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமானது. நாட்டின் எல்லைப்புறங்களைப் பாதுகாப்பது மத்திய அரசுகளின் பணி என்றால், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதும் மாநில அரசுகளின் நிர்வாகத்தில்தான் உள்ளது. முறையான பாதுகாப்பு இல்லையென்றால், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதும், தொழில்துறையை முன்னேற்றுவதும் சாத்தியமற்று போய்விடும்.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும், பல்வேறு துறைகளில் நம்மால் இன்னும் தன்னிறைவு எட்ட முடியவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் மின்
வசதி போன்ற அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கே இன்னும் போராட வேண்டியுள்ளது. “வீடுகளில் கழிவறை கட்டுங்கள்’ என்ற இயல்பான செயல்பாட்டுக்குக் கூட விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஒரு சில வடமாநிலங்களைப் போல் தமிழகத்தில் இல்லை என்றாலும், ஏராளமான கிராமங்களுக்கு சாலை வசதிகள்கூட இல்லை. சென்ற தலைமுறைகளில் வேகமாக ஓடிய நதிகளும், ஏரிகளும் நீர் வற்றி வருகின்றன. மேலும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றம், மகளிர் பாதுகாப்பு என பல்வேறு துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டியுள்ளது.
விவசாயத் துறையில் இயற்கையும், நவீனமும் கலந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்று அம்சங்களும் முறையாக நிறைவேறினால் மட்டுமே தமிழகத்தில் தொழில் துறை மேம்படும். இங்குள்ள ஹூண்டாய் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். அதேபோல், தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்களான நெசவு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வது அவசியமாகும்.
இப்படி பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதுதான் ஆட்சி நிர்வாகம். இலவசம் உள்ளிட்ட குறுகிய கால திட்டங்களுக்கும், மதம், ஜாதி போன்ற பிளவு ஏற்படுத்தும் காரணங்களுக்கும் இடம்கொடுக்காமல் ஆட்சிமுறை சார்ந்து வாக்களிக்கும் எண்ணம் மக்களிடையே ஏற்பட வேண்டும்.
இது குறித்த பார்வையை ஏற்படுத்துவது தொண்டு அமைப்புகளின் பணியாகும். இத்தகைய பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே வல்லரசான இந்தியாவையும், வளமான தமிழகத்தையும் உருவாக்க முடியும். அதற்கான வாய்ப்புகளாக தேர்தல் களத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். தவறினால், “மாற்றம் வரும்’ என்று அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

(தினமணி 14-05-2016)

Posted in Uncategorized | Leave a comment