சுவாமி விவேகானந்தர் – கவிதை

கடவுளை நேரில் பார்த்திட வேண்டி
பரமஹம்ஸரை நாடிச் சென்றாய்…
மானுட சேவையில் இறைவனைக் கண்டு
ஊருக்கெல்லாம் உற்சாகமளித்தாய்…

அடிமை நாட்டின் உயர்ந்த பெருமையை
அமெரிக்காவில் உரக்கச் சொன்னாய்…
இருண்டு கிடந்த மாந்தரின் நெஞ்சில்
வீரக் கனலை மூட்டி விட்டாய்…

துறவியர் கூட்டத்தைப் போர்ப்படையாக்கி
அகிலமெல்லாம் அனுப்பி வைத்தாய்
முன்னோர் காட்டிய அன்பு மதத்தை
உலகோர் சுவைத்திட அடித்தளமிட்டாய்

நூறு இளைஞர்களை எழுப்பிட வேண்டி
நூறாயிரம் மைல்கள் பயணம் செய்தாய்
சுதந்திர பாரதம் கண்டிட வேண்டி
ஆன்ம பலத்தினை வீரர்க்கு அளித்தாய்

ஊருக்குழைத்திடல் யோகம் என்பதை
வாழ்வினாலே பாடம் சொன்னாய்
தரித்திரம் நீங்கி வளங்கள் பெருகிட
சேவையே இங்கே ஆகுதி என்றாய்…

நாட்டுப்பணியில் நாட்டம் கொள்வதே
உமக்கு செலுத்தும் காணிக்கையாம்…
பாரத அன்னையின் அரியணை ஏற்றமே
உந்தன் புகழின் இலக்கணமாம்…

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment